எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்தது. இது வக்பு சொத்துக்களைச் சூறையாடுவதற்கான சதித் திட்டம் என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னணியில், மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் 21 மக்களவை உறுப்பினர்களும், 10 மாநிலங்களவை உறுப்பினர்களும் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டு ஆய்வுக்காக இம்மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், மசோதாவில் பல்வேறு திருத்தங்களுக்கு இரு தரப்பில் இருந்தும் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டன. பா.ஜ.க கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் அளித்த 14 திருத்தங்களை மட்டுமே பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவால் ஏற்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் முன்வைத்த 44 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது. இந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடப்படும் என்று எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தெரிவித்துள்ளனர்.