உன்னாவ் பாலியல் வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஜாமீன் வழங்கிய தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுயை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் கடந்த 2019 ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து குல்தீப் சிங் செங்கர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் காவல் நிலைய மரணத்திற்குக் காரணமான ஒரு தனி வழக்கில், 2020-ஆம் ஆண்டில் அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையையும் விதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து குல்தீப் சிங் செங்கர் தரப்பில் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த டிசம்பர் 23ஆம் தேதி விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், குல்தீப் சிங் செங்கரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது.
குல்தீப் சிங் செங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஜாமீன் வழங்கிய தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. மேலும், செல்வாக்கின் காரணமாக தண்டனையிலிருந்து தப்பிக்கும் போக்கிற்கு எதிராக, சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என சிபிஎம் தெரிவித்துள்ளது.
