ஆந்திரா மாநிலம் அனகப்பள்ளி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் அனகப்பள்ளி அருகே ஜார்கண்ட்டில் இருந்து எர்னாகுளத்திற்கு சென்றுகொண்டிருந்த டாடா-எர்னாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில், ரயிலின் பேன்ட்ரி காருக்கு அருகில் இருந்த பி1 மற்றும் எம்2 எனும் இரண்டு குளிர்சாதன பெட்டிகளில் தீப்பிடித்துள்ளது. இதை தொடர்ந்து 2000க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அனகப்பள்ளி, எலமஞ்சிலி மற்றும் நக்கப்பள்ளி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் பி1 ஏசி பெட்டியில் பயணம் செய்த விஜயவாடாவைச் சேர்ந்த சந்திரசேகர் சுந்தர் (70) என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
