இலங்கைத் தமிழர் குடியுரிமைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு தேவை
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் அடிப்படை வசதிகளை யும் புதிய குடியிருப்புகளையும் மேம்படுத்தத் தமிழக அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள் மிகுந்த வரவேற்புக்குரியவை. ஒரு நீண்டகாலத் துயரத்திற்குப் பிறகு அம்மக்களின் வாழ்வில் ஒளி ஏற்ற இத்தகைய நடவடிக்கைகள் அவ சியம். இருப்பினும், இத்தகைய வாழ்வாதார முன் னேற்றங்களுக்கு அப்பால், பல தசாப்தங் களாகத் தீர்க்கப்படாமல் புரையோடிப் போயிருக்கும் ‘குடியுரிமை’ எனும் அடிப்படைச் சட்டச் சிக்கல் ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி யுள்ளது. குறிப்பாக, இந்தியக் குடிமக்களைத் திருமணம் செய்துகொண்ட இலங்கைத் தமிழர்கள் மற்றும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் நிலை, இந்திய ஜனநாயகத்தின் மனிதாபிமான முகத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு பெரும் சவாலாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.
தற்போதைய இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி, பெற்றோரில் ஒருவர் ‘சட்ட விரோதக் குடியேறி’ என்று வகைப்படுத்தப் பட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை களுக்கு இந்தியக் குடியுரிமை கோரும் தகுதி சட்டப்பூர்வமாக மறுக்கப்படுகிறது. இதன் விளைவாக, 2004 டிசம்பர் 4-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவில் பிறந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள், தங்கள் பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருந்தும், சட்டத்தின் பார்வையில் ‘அந்நியர்களாகவே’ நடத்தப்படுகிறார்கள். இங்கேயே பிறந்து, இங்கேயே படித்து, இங்கேயே வளர்ந்து முடித்த ஒரு தலைமுறை, தங்களின் வேர்கள் எங்கே என்று தெரியாமல் தங்களுக்குச் சொந்தமான மண்ணிலேயே அடையாளச் சிக்கலில் தவிப்பது ஒரு வரலாற்றுப் பிழையாகும். இந்த இளைஞர்கள் கல்வி முடித்தும் முறையான வேலைவாய்ப்பு பெற முடியாமலும், ஜனநாயகக் கடமையான வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டும் முடங்கிக் கிடப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும்.
கிட்டத்தட்ட 3,000 முதல் 8,000 வரையிலான மக்கள் இத்தகைய இக்கட்டான சூழலில் சிக்கி யிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. உயர் நீதிமன்றங்கள் பலமுறை இவர்களுக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கியிருந்தாலும், காவல் துறை சரிபார்ப்பு மற்றும் அதிகாரத்துவத் தாமதங்களால் அத்தீர்ப்புகள் நடைமுறைக்கு வராமல் வெறும் காகித அளவிலேயே தேங்கிக் கிடக்கின்றன.
இந்த விவகாரத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஒரு சிறப்புக் கொள்கை ரீதியான தலையீட்டை (Special Policy Interven -tion) அவசரமாக முன்னெடுக்க வேண்டும். நீண்ட காலமாகத் தொடரும் இந்தச் சட்டப் போராட்டங் கள் அடுத்தடுத்த தலைமுறைக்கும் பாரமாக மாறிவிடக் கூடாது. வரலாற்றின் பின்னணியை யும் மனிதாபிமானத்தையும் முதன்மைப்படுத்தி, ஒரு தெளிவான கொள்கை முடிவை எடுப்பதன் மூலமே இந்தத் தலைமுறை கடந்த அநீதிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
