நீதித்துறைச் சிதைவும் ஆளும் வர்க்கத்தின் பாதுகாப்பும்
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கின் முக்கியக் குற்றவாளி, முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரின் தண்டனையை நிறுத்தி வைத்து, தில்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமீன் உத்தரவு, இந்தியாவின் நீதித்துறை மற்றும் அதிகார வர்க்கத்தின் மீதான நம்பிக்கையை அடி மட்டத்திற்குச் சரித்துள்ளது. ஓர் ஏழைப் பெண் ணின் வாழ்வைச் சிதைத்து, அவரது தந்தையின் மரணத்திற்குக் காரணமாகி, ஒட்டுமொத்த குடும் பத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய ஒரு நபர், இன்று சுதந்திரமாக சுற்றித் திரிய அனும திப்பது என்பது சமூக நீதிக்கும் ஜனநாயகத்திற் கும் விடுக்கப்பட்ட சவாலாகும்.
இந்த வழக்கில் நீதிமன்றம் முன்வைத்துள்ள வாதம் மிகவும் விந்தையானது. ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த செங்கார், ‘அரசு ஊழியர்’ என்ற வரையறைக்குள் வரமாட்டார் என்றும், அதனால் அவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்க முடியாது என்றும் நீதி மன்றம் கருதியிருப்பது சட்டத்தின் நுணுக்கங்களை ஏழை மக்களுக்கு எதிராகத் திருப்புவதாகும்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதும், அவர்கள் சட்டத் தின் ஓட்டைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்ததையே போதுமானதாகக் கருது வது, பாதிக்கப்பட்ட பெண்ணின் வலிக்கும் அவர் இழந்த உயிருக்கும் அளிக்கப்பட்ட மிகக் குறைந்த விலை.
நீதிமன்ற உத்தரவுக்குப் பின், நீதிக்காகப் போராடும் அந்தப் பெண்ணும் அவரது தாயும் தில்லியில் போராட்டம் நடத்த முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த ஜாமீன் உத்தரவு குறித்து அந்த பெண் குடும்பத்தினரின் கண்ணீரை பார்த்து, ஒரு நாகரிக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணைத் தெருவில் நிறுத்திவிட்டு, குற்றவாளிக்குச் சிவப்புச் கம்பளம் விரிப்பது, “பாதுகாப்பான சமூகம்” என்ற சொல்லாடலையே கேலிக்கூத்தாக்குகிறது. குல்தீப் சிங் செங்கார் போன்ற செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் விடுவிக்கப்படுவது, சாதாரண பெண்கள் மீதான அடக்குமுறையை மேலும் அதி கப்படுத்தும். இது வெறும் தனிநபர் குற்றமல்ல; அதி காரத் திமிரால் விளைந்த ஒரு வர்க்கக் குற்றம்.
இந்தப் பெண்ணின் போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போன்ற மகளிர் அமைப்புகள் குரல் கொடுப்பது நம்பிக்கை யளிக்கிறது. ஆனால், உச்சநீதிமன்றம் தலையிட்டு இந்த அநீதியைச் சரி செய்யாவிட்டால், “அதிகா ரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நீதி, சாமானியர்க ளுக்கு ஒரு நீதி” என்ற கறை இந்தியாவின் முகத் தில் நிரந்தரமாகத் தங்கிவிடும். குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அவரது குடும்பத் தினருக்கும் முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். செங்கார் போன்றவர்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால்தான் இருக்க வேண்டும்.
