பேருந்து நிலைய கடை குத்தகை உரிமத்தில் முறைகேடு போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கவுன்சிலர் கைது
தருமபுரி, டிச.26- கடை குத்தகை உரிமத்தை முறைகேடாக நீட்டிக்கும் தீர்மா னத்தை எதிர்த்து, தர்ணாவில் ஈடு பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப் பட்டி புதிய பேருந்து நிலைய வளா கத்தில், சாலையையொட்டியுள்ள 40 அடி நீளம், 15 அடி அகலம் கொண்ட காலியிடம், ஆவின் கடை நடத்துவதற்காக ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநருக்கு ஓராண்டு குத்தகைக்கு விடப்பட் டது. இதன்பின் அந்த குத்தகை நீட்டிக்கப்பட்டு வந்தது. புதிய பேருந்து நிலையத்தில் 100 ச.அடி பரப்புள்ள மற்ற கடைகள் மாத வாடகை ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை ஏலம் விடப்பட்டுள் ளது. ஆனால், பிரதான பகுதியி லுள்ள 600 ச.அடி பரப்புள்ள கடை வெறும் ரூ.3 ஆயிரம் வாடகைக்கு குத்தகை விடப்பட்டது. கடந்த 2022 டிசம்பருடன் குத்தகை காலம் முடி வடைந்த நிலையில், பேரூராட்சி கள் விதிப்படி காலியிடத்துக்கு வழி காட்டி மதிப்பில் 3 சதவிகிதத்துக்கு குறையாமல் வாடகை வசூலிக்கப் பட வேண்டும். அதனடிப்படையில் வழிகாட்டி மதிப்பு சதுர அடி ஒன் றுக்கு ரூ.1000 வீதம் 600 ச.அடிக்கு குறைந்தபட்சம் மாத வாடகையாக ரூ.18 ஆயிரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் கூறிவிட்டது. இதனை எதிர்த்து குத்தகை உரி மம் காலாவதியான நிலையில், குத் தகைதாரர் உரிமத்தை நீட்டிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உயர்நீதிமன்றம், அவ ரின் வழக்கை தள்ளுபடி செய்துவிட் டது. பொது ஏலம் மூலம் குத்தகை உரிமத்தை ஏலம் மூலம் எடுத்துக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத் தரவிட்டது. இந்நிலையில் பொது ஏலம் நடத்தாமல் மீண்டும் மூன்று ஆண்டு காலத்துக்கு குத்தகையை நீட்டித்து வெள்ளியன்று நடை பெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத் தில் தீர்மானம் கொண்டு வரப்பட் டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 8 ஆவது வார்டு உறுப்பி னர் வே.விஸ்வநாதன், கூட்டத்திலி ருந்து வெளிநடப்பு செய்தார். இதன்பின் பேரூராட்சி மன்ற அலுவ லகம் முன்பு குத்தகை நீட்டிப்பைக் கண்டித்து வாசகங்கள் அடங்கிய அட்டையை தோளில் மாட்டிக் கொண்டு, கையில் செங்கொடியு டன் தர்ணாவில் ஈடுபட்டார். இதை யடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
