புதுதில்லி, டிச. 17 - இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ (One Nation; One Election) மசோதா விவகாரத்தில் ஒன்றிய பாஜக கூட்டணி அரசு பின் வாங்கியது.
மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்த ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், திடீரென மசோதாவை ஆய்வு செய்வ தற்காக, நாடாளுமன்ற கூட்டுக்குழு வின் முடிவுக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளார்.
இதனால், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவை- நடப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுவ திலிருந்து- எதிர்க்கட்சிகள் முறி யடித்துள்ளன.
ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான குடியரசு முன்னாள் தலை வர் ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரைக்கு, நரேந்திர மோடி தலை மையிலான ஒன்றிய அமைச்சரவை, கடந்த செப்டம்பர் 18 அன்றே ஒப்புதல் அளித்தது.
இதனால், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான மசோதா நாடாளுமன்றத் தில் எப்போது வேண்டுமானாலும் தாக்கல் செய்யப்படலாம் என்ற நிலை யில், நவம்பர் 25 அன்று கூடிய நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு ஒன்றிய பாஜக அரசு தீவிரமாகியது.
அரசியல் சட்டத் திருத்த மசோதாக்கள் தாக்கல்
ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் உருவாக்கப் பட்ட மசோதாவிற்கு கடந்த டிசம்பர் 12 அன்று ஒன்றிய அமைச்சரவை ஒப்புத லும் வழங்கப்பட்டது. இந்த பின்னணி யில் திங்கட்கிழமையன்று (டிச.16) மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருநாள் தாமதமாக, செவ்வாயன்று நண்பகல் 12 மணிக்கு ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக இந்திய அரசிய லமைப்பில் 129-ஆவது திருத்தத்தை மேற்கொள்ளும் இரண்டு மசோதாக்களை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
முன்னதாக, இந்த மசோதாக்களை மக்களவையில் அறிமுகம் செய்வது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அப்போது, மசோதாவைத் தாக்கல் செய்யலாம் என்று 269 வாக்கு களும், கூடாது என்று 196 வாக்கு களும் பதிவாகின.
மசோதாக்களில் புதிய திருத்தங்கள் சேர்ப்பு
பின்னர், தோராயமாக ஆதரவு வாக்குகள் 269, எதிர்ப்பு வாக்குகள் 196 என அறிவிக்கப்பட்டு, அதைத்தொட ர்ந்தே, மசோதாவைத் தாக்கல் செய்ய ஆதரவு கிடைத்து விட்டது என்று கூறி, நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டப்பேரவை களுக்கும், யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் ‘அரசியலமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா- 2024’ மற்றும் ‘யூனியன் பிரதேச சட்ட (திருத்தம்) மசோதா- 2024’ ஆகியவற்றை சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாக்களில் புதிதாக சட்டப்பிரிவு 82(ஏ) இணைக்க முன்மொழியப்பட்டு உள்ளது. மேலும், சட்டப்பிரிவு 83, சட்டப்பிரிவு 172, சட்டப்பிரிவு327-களில் திருத்தம் மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மோடி அரசின் சமாளிப்பு நடவடிக்கை
அதாவது, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை சட்டமாக்க அரசியல் சாச னத்தில் ‘82ஏ’ என்ற புதிய பிரிவு இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்படும். சில மாநிலங் கள் அல்லது ஒரு மாநிலத்திற்கு மட்டும் அந்த நேரத்தில் தேர்தல் நடத்த முடி யாமல் போனால், இந்த சூழலை கையாள்வதற்கான சரத்துகள் புதிய சட்டத்திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன. இதன்படி, மசோதாவின் பிரிவு 2, உட்பிரிவு 5-இல், “மக்களவை தேர்தலுடன், ஏதேனும் ஒரு மாநில தேர்தல் நடத்த முடியாத சூழல் இருப்பதாக தேர்தல் ஆணையம் கருதினால், பின்னொரு நாளில் தேர்த லை நடத்தும் வகையில் ஆணை பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்யும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு
அறிமுகத்தின்போதே, ஒன்றிய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோ தாவுக்கு காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆரம்ப சுற்று விவாதம் நடத்தப்பட் டது. இதில், காங்கிரஸ் சார்பில் மணீஷ் திவாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆர். சச்சிதானந்தம், திமுக சார்பில் டி.ஆர். பாலு, சமாஜ்வாதி உறுப்பினர் தர்மேந்திர யாதவ், திரிணா முல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி, சிவசேனா (யுபிடி) சார்பில் அனில் தேசாய், மஜ்லிஸ் கட்சித் தலை வர் ஒவைசி உள்ளிட்டோர் அடுக்கடுக் கான பல கேள்விகளை எழுப்பினர்.
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான 129-ஆவது சட்டத் திருத்தமானது, நாட்டை ஜனநாயகத்திலிருந்து பிரித்து, சர்வாதிகாரத்தை நோக்கி, அதிபர் ஆட்சியை நோக்கி கொண்டு செல்லும். இந்த திருத்தங்களில் சில, மாநிலங்களின் உரிமை தொடர் பானவை ஆகும். அந்த வகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்திய அரசியலமைப்பின் பிரதான அம்ச மான கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் எதி ரானது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஊழல் - விலைவாசி உயர்வை திசைத்திருப்ப முயற்சி
இந்த சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். அது தற்போதைய பாஜக கூட்டணி அரசுக்கு இல்லை என்பது நன்றாகத் தெரிந்தும், வேலையின்மை, விலை வாசி உயர்வு, பணவீக்கம், அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் ஊழல் - முறைகேடு, மத வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசைத் திருப்புவதற்காக, நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மோடி அரசு கையில் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டினர். இதனை ஏற்க முடியாது என்றும், மசோதாக்களை நாடாளு மன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சிகளின் இந்த கடுமை யான எதிர்ப்பால், மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழு (Joint Parliamentary Committee - JPC) பரிசீலனைக்கு அனுப்ப ஒன்றிய அரசு தயார் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். பிரதமர் மோடியின் முன்மொழிவும்கூட இது தான் என்று அவர் சமாளித்து பின்வாங்கினார்.
கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைப்பு!
அதைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் விதி 74-இன் கீழ், இந்த மசோதா வுக்கு நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கும் தீர்மானத்தை முன் மொழிந்தார். இதனால், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை, சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்புகிறார். இக்குழு 90 நாட்களில் மசோதா குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்; தேவைப் பட்டால் காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான மசோதாவுக்கு பாஜக கூட்டணியிலுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் மட்டுமன்றி, கூட்டணியில் இல்லை என்று கூறிக்கொள்ளும் அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.