எம்.டெக் படிப்புக்கான கல்விக்கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தவும், மாணவர்களுக்கான மாத உதவித் தொகையை நிறுத்தவும் ஐஐடி கவுன்சில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடுத்தர மக்கள் மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு சில துறைகள் எட்டாக் கனியாகவே இருந்து வரும் நிலையில், ஐ.ஐ.டி உள்ளிட்ட பல பொதுக் கல்வி நிறுவனங்களை மாணவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். ஏனெனில், மற்ற தனியார் நிறுவனங்களை விட ஐஐடியில் கட்டணம் குறைவாக இருப்பதே முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று தில்லியில் நடைபெற்ற மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையிலான ஐ.ஐ.டி. கவுன்சில் கூட்டத்தில், ஐஐடிகளில் பி.டெக் படிப்புக்கு (ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்) கட்டணத்துக்கு இணையாக எம்.டெக் படிப்புக்கான கல்விக்கட்டணத்தை (10 மடங்கு வரை) உயர்த்தவும், கேட் தேர்வின் மூலம் எம்.டெக் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான மாத உதவித் தொகையாக வழங்கப்படும் 12,400 ரூபாயை நிறுத்தவும் ஐஐடி கவுன்சில் முடிவு செய்துள்ளதாக மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐஐடிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் தரம் மதிப்பிடப்பட்டு, அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் 2020 கல்வியாண்டில், தொடங்கி 3 ஆண்டுகளில் படிப்படியாக கொண்டு வரப்படவுள்ளன. இந்த மாற்றங்கள் மூலம் கிடைக்கும் கூடுதல் நிதியால், ஐஐடிகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி தரம் மேம்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.