india

img

ஜே.என்.யுவில் பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்த பிரபல பொருளாதார நிபுணர்

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பிரபல பொருளாதார நிபுணர் அமித் பாதுரி தனது கவுரவ பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்தார். 

தலை சிறந்த அறிஞர்களை உருவாக்கும் பல்கலைக்கழகம் என்கிற பெயர், ஜே.என்.யுவிற்கு உண்டு. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வலுமிக்க போராட்டத்தை நடத்தியும், மத்திய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை அம்பலப்படுத்தியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதே சமயம் பல்கலைக்கழக கட்டண உயர்வை எதிர்த்தும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி இரவு முகமூடி அணிந்து சிலர் ஆயுதங்களோடு நுழைந்து அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் மாணவர் பேரவை தலைவரான ஆய்ஷே கோஷ் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக, தாக்குதலுக்கு உள்ளான ஜெ.என்.யு மாணவர் பேரவை தலைவர் ஆய்ஷே கோஷ் உள்ளிட்ட 19 பேர் மீதே தில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அடுத்து, பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில், ஏபிவிபி மாணவர் அமைப்பினரும் அடங்குவர். 

இந்நிலையில், ஜே.என்.யுவில் பணியாற்றி வந்த பிரபல பொருளாதார நிபுணர் அமித் பாதுரி தனது கவுரவ பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்தார்.  மேலும் கருத்து வேறுபாடுகளைத் தூண்டும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், கருத்துச் சுதந்திரத்திற்கான சூழ்நிலையை அழிக்க நிர்வாகம் தற்போது முயற்சித்து வருவது ஒரு பெரிய மற்றும் மோசமான திட்டத்துடன் ஒத்துப்போகிறதாகவும், அதில் ஜே.என்.யு துணைவேந்தரின் பங்கு முக்கிய பகுதியாகத் தோன்றுகிறது என்றும் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.