ராஜ்கோட்
இந்தியாவில் கொரோனாவின் 2-ஆவது அலை வேகமாக பரவும் முதல் 10 மாநிலங்களில் ஒன்றாக பாஜக ஆளும் குஜராத் உள்ளது.
ஆனால், விஜய் ரூபானி தலைமையிலான ஆளும் பாஜக அரசானது, ஆரம்பம் முதலே தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதிலேயே குறியாக இருந்து வருகிறது.கடந்த ஏப்ரல் 16 அன்று அரசு தகவல்களின்படியான கொரோனா மரணம் 78. ஆனால் குஜராத்தின் 7 நகரங்களில் கொரோனா நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளின்படி மொத்தம் 689 உடல்கள் எரிக்கப்பட்டதை ஊடகங்கள் அம்பலப்படுத்தின. அகமதாபாத்தின் கொரோனா சிறப்பு அரசு மருத்துவமனையிலிருந்து மட்டும் ஏப்ரல் 16 அன்று 200 உடல்களும், சூரத் நகரின் 2 மருத்துவமனைகளிலிருந்து சுமார் 190 உடல்களும் தகனத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இதேபோல, ஜாம்நகரில் உள்ள குருகோவிந்த் மருத்துவமனையிலிருந்து ஒவ்வொரு நாளுமே 24 உடல்கள் தகனத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன என்பதை ஆதாரங்களுடன் வெளியே கொண்டு வந்தன.
ஆனாலும், குஜராத் பாஜக அரசானது, இப்போதுவரை கொரோனா தொற்றால் பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையே 125-தான் என்று கூறிக் கொண்டிருக்கிறது.கொரோனாவால் உயிரிழந்தவர் களை, மாரடைப்பு மற்றும் நீண்டநாள் சர்க்கரை நோய்கள், சிறுநீரக கோளாறுகளால் இறந்தவர்களாக கணக்குக் காட்டி வருகிறது. அகமதாபாத் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனாவால் இறந்த58 வயது நபருக்கு சிறுநீரகக் கோளாறால் மரணம் ஏற்பட்டது என்று மருத்துவஅறிக்கையே தயாரித்து வழங்கப்பட்டது. இதுபோல நூற்றுக்கணக்கான மரணங்கள் குஜராத்தில் மறைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்தான், குஜராத் மாநில செய்தித்தாள்களில் வெளியாகும் மரணஅறிவிப்பு மற்றும் இரங்கல் விளம்பரங்கள், மாநில பாஜக அரசின் பொய்களைஅம்பலப்படுத்துவதாக அமைந் துள்ளன.குஜராத் மாநிலத்தின் பிரபல செய் தித்தாள் சந்தேஷ். இந்த செய்தித்தாளின் ராஜ்கோட் பதிப்பில் மொத்தமுள்ள 20 பக்கங்களில் சுமார் 7 பக்கங்களை முழுவதுமாக இரங்கல் விளம்பரங்களே ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ளன. இந்த விளம்பரங்களில் இடம்பெற்றிருப்பவர்கள் பெரும்பாலும் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களாகவே உள்ளனர். உதாரணமாக, இந்த விளம்பரங்களில், இறுதி நிகழ்ச்சிக்கு நண்பர்கள், உறவினர்கள் யாரும் நேரில் வரவேண்டாம்... தொலைபேசியில் மட்டுமே தொடர்பு கொள்ளுங் கள் என்று குறிப்பான வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றின்மூலம் நடந்தவை கொரோனா மரணங்கள் தான் என்பது அரசு சொல்லாமலேயே உறுதியாகியுள்ளது.
ஹரியானாவிலும் மோசடி
பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான ஹரியானாவின் குருகிராமில் 2 நாட்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், 8 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அரசு கணக்கு காட்டியுள்ளது. குருகிராம் நகரில் உள்ள 2 மயானங்களில் கடந்த 2 நாட்களில் 106 உடல்கள் தகனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மொத்தமே 8 பேர்தான் கொரோனாவால் உயிரிழந்ததாக அம்மாநில பாஜகஅரசின் சுகாதாரத்துறை, மக்களை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.