ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், எச்சரிக்கையுடன் செயல்பட ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இதுவரை 8 பேருக்கு 'ஜிகா' வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 'ஜிகா' வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கர்ப்பிணி பெண்கள் தொற்றுநோய் பரிசோதனை மற்றும் கரு வளர்ச்சியை கண்காணிப்பதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
'ஏடிஸ்' கொசு மூலம் உருவாகும் 'ஜிகா' வைரஸ் அதிக அளவில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கக் கூடும். எனவே, அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஒரு கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். 'ஏடிஸ்' கொசுப்புழு உற்பத்தி ஆகாத வகையில் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களை பராமரிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகள், பணியிடங்கள், கட்டுமான தளங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, கண் இமைகளில் வீக்கம், தசை மற்றும் மூட்டுவலி உள்ளிட்ட அறிகுறிகள் 2 முதல் 7 நாட்கள் வரை இருந்தால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், ஜிகா வைரஸிற்கு தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.