புதுதில்லி:
ஒன்றிய பாஜக அரசின் - கார்ப்பரேட்டுக்களுக்கு ஆதரவான புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். குறிப்பாக, தில்லியின்சிங்கு, திக்ரி, காஜிபூர் எல்லை களை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு, கடந்த 9 மாதமாக போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.
தற்போது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியுள்ள நிலையில், தங்களின் போராட்டத்தை அவர்கள் நாடாளுமன்றம் அருகேயுள்ள ஜந்தர் மந்தர் பகுதிக்கும் விரிவுபடுத்தியுள்ளனர். அங்கு மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தி அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.200 பேருக்கு மட்டுமே, போராட்டம் நடத்த அனுமதி வழங்கப் பட்டிருந்தாலும், ஜந்தர் மந்தரில்கூடும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிங்கு, திக்ரி, காஜிபூர் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ஜந்தர் மந்தர் விவசாயிகளின் மற்றொரு புதிய போராட்டக்களமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஒன்றிய பாஜக அரசுக்கு நெருக்கடியாகவும் மாறியுள்ளது.
இதனிடையே, தில்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி, விவசாயிகளின் போராட்டத்தை கடுமையாக சாடினார்.‘தில்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல; அவர்கள் குண்டர்கள்! அவர்கள் செய்பவை அனைத்தும் குற்றச் செயல்கள். ‘ஜனவரி 26’ அன்று நடந்த சம்பவங்களும் வெட்கக்கேடான குற்றவாளிகளின் நட வடிக்கைகள்தான். எதிர்க்கட்சி களே, இதுபோன்ற விவசாயி களின் போராட்டத்தை ஊக்குவிக் கின்றன’ என்று மீனாட்சி லேகி தெரிவித்தார்.அவர் பேசியதற்கேற்பவே விவசாயிகள் போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இது விவசாயிகளை கொந்தளிப்பிற்கு ஆழ்த்தியது. “நாங்கள் கலவரம் செய்பவர்களா அல்லது குற்றவாளிகளா?” என்று பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கேள்வி எழுப்பி, கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி தனது முந்தையப் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். “குண்டர்கள் மட்டுமே வன்முறையில் ஈடுபடுவார்கள். விவசாயிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மட்டார்கள் என்று தான் நான் கூறினேன். ஆனால், எனது அறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஆயினும்,விவசாயிகளுடன் தொடர்பு படுத்தப்பட்ட எனது கருத்துக்கள் யாரையும் புண்படுத்தியிருந் தால், நான் என் வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்” என்று பல்டி அடித்துள்ளார்.