tamilnadu

img

ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மைல்கல்!

ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மைல்கல்!

கே. பாலகிருஷ்ணன் வரவேற்பு

சென்னை, ஏப். 28 - “கண்ணகி - முருகேசன் படுகொலை வழக்கில் போலீசார் உள்பட 11 குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருப்பது, சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மைல் கல்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சிபிஎம் நடத்திய பல கட்டப் போராட்டம்! கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள குப்பநத்தம் காலனியைச் சேர்ந்த முருகேசன் (25) மற்றும் கண்ணகி (22) இருவரும் காதலித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்தனர். இதனை ஏற்க மறுத்த கண்ணகியின் குடும்பத்தினர், 2003 ஜூலை 8 ஆம் தேதி, இருவரையும் புதுக்கூரைப்பேட்டை முந்திரித்தோப்பில் வைத்து, மூக்கு மற்றும் காது வழியாக விஷம் செலுத்திக் கொலை செய்ததோடு, இருவரின் உடல்களையும் எரித்துத் தடயங்களை அழித்தனர்.   இந்த வழக்கில் மிகவும் பாரபட்சமாக நடந்து கொண்ட விருத்தாசலம் காவல்துறை, குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் என இருபக்கமும் வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முனைந்தது. இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெறுவதற்காக சிபிஎம் பல கட்டப் போராட்டங்களை நடத்தியது.   போலீசார் உட்பட 15 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை! இந்த வழக்கில், கொல்லப்பட்ட முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டதை எதிர்த்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதன் பின்னர், 2004 ஆம் ஆண்டில் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இந்தக் கொடூரமான ஆணவக் கொலையில் ஈடுபட்ட கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டி மட்டுமல்லாமல், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிபிஐ விசாரணையின் அடிப்படையில், 18 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பளித்த கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் (எஸ்.சி/எஸ்.டி சிறப்பு நீதிமன்றம்), ஆணவக் கொலையில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் தூக்கு மற்றும் ஆயுள் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.   பல்முனை நடவடிக்கையின்  அவசியத்தை உணர்த்திய வழக்கு இந்தத் தீர்ப்பின் மீதான மேல் முறையீட்டை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உதவி ஆய்வாளருக்கு தண்டனையைச் சற்றுத் தளர்த்தினாலும், டி.எஸ்.பியாக இருந்த செல்லமுத்துவின் ஆயுள் தண்டனையை உறுதி செய்ததோடு, மற்ற குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தியது. இப்போது, இந்த வழக்கில் குற்றவாளிகளின் மேல் முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 28, 2025) தள்ளுபடி செய்துள்ளது.   வாழ வேண்டிய இரண்டு இளம் உயிர்களின் வாழ்க்கை யை முற்றாக அழித்த ஆணவக் கொலையும், சாதி வெறி கொண்ட கொலைக் கூட்டத்துக்கு ஆதரவாக நின்ற காவல் துறையினரின் நடவடிக்கையும் கடும் கண்டனத்துக்குரியது. இந்தத் தீர்ப்பு, ஆணவக் குற்றங்களுக்கு எதிரான பல்முனை நடவடிக்கை தேவை என்பதை எடுத்துக்காட்டுகிறது.   நீதிக்காகப் போராடிய  முருகேசன் குடும்பத்தினர் இந்த நேரத்தில், நீதிக்காகப் போராடிய முருகேசன் குடும்பத்தினர் மற்றும் சாதிக்கு எதிரான ஜனநாயக சக்திகள்  அனைவருக்கும் நாங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.   முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு உள்ளிட்டோர், நீதிக்கான இந்தப் போராட்டத்தில் பல்வேறு அச்சுறுத்தல் களை எதிர்கொண்டுள்ளனர். வழக்குத் தேவைக்கும் பிற தேவைகளுக்கும் பொருளாதாரச் சுமையை ஏற்றுள்ளனர். எனவே, அரசு இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நியாயமான நிவாரணம் வழங்க வேண்டும்.   மேலும், குற்றவாளிகள் பக்கம் மிகவும் சக்திவாய்ந்த வழக்கறிஞர்கள் அமர்த்தப்பட்ட நிலையிலும், அயர்வின்றி போராடிய பௌத்தப் பொதுவுடைமை இயக்க  ஒருங்கிணைப்பாளர்- வழக்கறிஞர் பொ. ரத்தினம் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும் சிபிஎம் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.