india

img

தில்லி கலவர வழக்கு: உமர் காலித் ஜாமீன் மேல்முறையீடு மனு தள்ளுபடி

2020ஆம் ஆண்டு தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர்களும், ஜெ.என்.யு முன்னாள் மாணவர்களுமான உமர் காலித், ஷர்ஜீல் இமாம், உட்பட 9 பேரில் ஜாமீன் மேல்முறையீடு மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2020ஆம் ஆண்டு சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தின்போது, தில்லியில் கலவரம் வெடித்தது. இதில் 53 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள்.

இது தொடர்பான வழக்கில், கலவரத்தை தூண்டியதாக கூறி சமூக செயல்பாட்டாளர்கள் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், அதர் கான், காலித் சைஃபி, முகமது சலீம் கான், ஷிஃபா உர் ரெஹ்மான், மீரான் ஹைதர், குல்பிஷா பாத்திமா மற்றும் ஷதாப் அகமது ஆகியோரும் அடுத்தடுத்து தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வரும் இவர்கள் பல முறை ஜாமீன் மனுத் தாக்கல் செய்தபோதும், கீழமை நீதிமன்றங்கள் அதனை தள்ளுபடி செய்தன. இந்த சூழலில், உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உட்பட 9 பேரும் தில்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை இன்று விசாரித்த நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ஷாலிந்தர் கவுர் அடங்கிய அமர்வு, 9 பேரில் ஜாமீன் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.