ஜிஎஸ்டி: ஜவுளித்துறையின் கழுத்தில் கட்டப்பட்ட கல்
இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அளிக்கும் துறைகளில் ஒன்றான ஜவுளித்துறை, ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது. “ஒரே நாடு, ஒரே வரி” என்ற கோஷத்துடன் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி, ஜவுளித்துறையில் “பல வரிகள், பல பிரச்சினைகள்” என்ற நிலையையே உருவாக்கி யுள்ளது.
பருத்தி அடிப்படையிலான ஜவுளிக்கு 5% ஜிஎஸ்டி என்ற நிலையில், ரூ.1,000க்கு மேல் உள்ள ஆடைகளுக்கு 12% வரி விதிக்கப்படுகிறது. செயற்கை நார் துறை மிகவும் சிக்கலான வரி அமைப்பில் சிக்கியுள்ளது. பிடிஏ மற்றும் எம்இஜி போன்ற முக்கிய மூலப்பொருட்களுக்கு 18%, நூல்களுக்கு 12%, துணிகளுக்கு 5% என்ற முரண்பாடான நிலையில் உள்ளது. இந்த வரி அமைப்பின் நேரடி பாதிப்பு தொழிலாளர்கள் மீது விழுகிறது. குறிப்பாக தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஜவுளி நிறு வனங்கள் மூடப்படுவதால், லட்சக்கணக்கான தொழி லாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
மூலப்பொருளுக்கு அதிக வரியும், இறுதிப் பொருளுக்கு குறைந்த வரியும் விதிக்கப்படுவ தால், உற்பத்தியாளர்கள் நஷ்டத்தில் இயங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. உலகச் சந்தையில் இந்திய ஜவுளிப் பொருட்களின் போட்டித்திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகள் நமது சந்தைப் பங்கை கைப்பற்றியுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் மோடி அரசு கொண்டு வந்த சீரற்ற ஜிஎஸ்டி வரி அமைப்பு தான்.
பருத்தி உற்பத்தியாளர்களும் இந்த நிலையால் பாதிக்கப்படுகின்றனர். செயற்கை நார் துறை சரிவால், பருத்திக்கான கிராக்கியும் குறைந்துள் ளது. இது ஒட்டுமொத்த ஜவுளித்துறை சார் உற்பத்தி - விற்பனைச் சங்கிலியையே பாதிக்கிறது. அரசாங்கம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறும் அதே வேளையில், ஜவுளித்துறைக்கு எதிரான வரிக் கொள்கையைத் தொடர்கிறது. இது ஒரு முரண்பாடான அணுகுமுறையாகும்.
இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று மோடி அரசுக்கு, பல்வேறு ஜவுளி அமைப்பு கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. முழு ஜவுளி மதிப்பு சங்கிலிக்கும் 5% சீரான ஜிஎஸ்டி, நார் வகையை பொருட்படுத்தாத சம வரி அமைப்பு, உள்ளீடு வரித் தொகையை திரும்பப் பெறுவதில் உள்ள சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு ஆகியவற்றை மோடி அரசு உடனே கவனிக்க வேண்டும்.
கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதா ரத்துடன் நேரடியாக தொடர்புடைய இந்த துறையின் நலனுக்காக, அரசு உடனடியாக ஜிஎஸ்டி கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜவுளித்துறையின் மீட்சிதான் இந்தியா வின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும். இதை அரசு உணர்ந்து, உடனே செயல்பட வேண்டும்.