கேரளத்தின் - தமிழகத்தின் நியாயமான குரல்கள் வெல்லட்டும்!
கேரளாவில், ஒரே நேரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளும் (SIR) உள்ளாட்சித் தேர்தல்களும் எப்படி நடத்த முடியும், கேரள அரசின் நிலையைப் பரிசீலி யுங்கள் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது கேரள அரசு நிர்வாகத்தின் இரட்டைச் சுமையை நீதித்துறை கூர்மையாக அங்கீகரித்ததன் வெளிப்பாடு எனக் கொள்ளலாம்.
கேரள மாநில அரசு, எஸ்ஐஆர் பணிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றுக்கு சுமார் 2.4 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தேவைப்படுவதாக நீதிமன்றத்தில் வாதிட்டது. இதில், எஸ்ஐஆர் பணிக்கு மட்டும் 25,668 பயிற்சி பெற்ற அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். இந்த ஊழியர்கள் ஒரே சமயத்தில் இருபெரும் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டால், அன்றாட அரசு நிர்வாகம் ‘முட்டுக்கட்டை’ நிலையை அடையும்; எனவே எஸ்ஐஆர் பணியை ஒத்திவைக்க வேண்டும் என்ற கேரள அரசின் வாதம், முற்றிலும் யதார்த்தமானது. குறிப்பாக, பணியில் ஈடுபடுத்தப்படும் வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் (BLO) “அதிகப்படியான வேலை அழுத்தத்தில்” இருப்பதாகக் கூறி விடுப்பு எடுப்பதாகவும், சிலர் உயிர் இழப்பினை சந்திப்பதாகவும் வந்த செய்திகள், அரசின் சேவைகளைப் பாதிக்கும் என்ற கவலை நியாயமானதே.
உச்சநீதிமன்றம், இந்தப் பிரச்சனை குறித்து ஆளும் இடது ஜனநாயக முன்னணியும் எதிர்க்கட்சிகளும் ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்திருப்பதைக் கவனத்தில் கொண்டது. இது அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, நிர்வாகச் சிக்கலின் தீவிரத்தை உணர்த்துகிறது. மேலும், தமிழக அரசு உட்பட கேரளாவின் நிலைப்பாட்டை ஆதரித்தது, இது தனிப்பட்ட மாநிலச் சிக்கல் அல்ல என்பதை நிரூபித்தது.
தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, கேரள அரசின் கோரிக்கையை “நியாய மானது, தகுதியானது” என்று ஏற்றுக்கொண்டு, தேர்தல் ஆணையத்தை, அதை “சமூக உணர்வுடனும் புறநிலை எதார்த்தத்தின் அடிப்படையிலும்” டிசம்பர் 3-ஆம் தேதிக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது, இந்தத் தீர்ப்பின் மிகக் கூர்மையான அம்சம். வெறும் சட்ட நுணுக்கங்களைப் பார்க்காமல், மக்களின் நலன் சார்ந்த நிர்வாகப் பார்வையை நீதிமன்றம் முன்வைத்தது பாராட்டத்தக்கது.
எனவே, தேர்தல் ஆணையம் கால அவகாசத்தை நீட்டித்து, கேரளாவின் நிர்வாக இயந்திரம் சீராகச் செயல்பட அவகாசம் அளிக்க வேண்டும் என்பதே அம்மாநில மக்களின் எதிர்பார்ப்பு. இதற்கு தேர்தல் ஆணையம் செவி சாய்க்குமா என்ற கேள்வி எழுகிறது.
தமிழக வழக்கும் கிட்டத்தட்ட இதே போன்றது தான். அந்த வழக்கிலும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் பொருத்தமானதாக அமை யட்டும்.
