நாளொரு நடிப்பு ; பொழுதொரு வேடம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியுள்ளது. எதிர்பார்க்கப்பட்டது போலவே, கூட்டத் தொடரின் முதல்நாளிலேயே அனல் காற்று வீசத் துவங்கியுள்ளது. ‘இதை எதிர் பார்த்து பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சி யினர் பிரச்சனைகளை முன்வைக்க வேண்டும். நாடகம் போடக் கூடாது. நாடகம் நடத்துவதற்கு வேறு இடங்கள் உள்ளன. அவையில் மக்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்த வேண்டும்’ என்று உபதேசம் செய்துள்ளார்.
பீகாரைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்திலேயே எதிர்க் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் இதற்கு அரசு எந்த பதிலையும் கூறாத நிலையில்தான் மக்களவையில் இந்த பிரச்சனை எழுப்பப்பட வுள்ளது. அரசுத் தரப்பு விவாதத்திற்கு இணங்காத நிலையில், அவையில் அமளி ஏற்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதானியின் ஊழல் குறித்து அவையில் விவாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்கா கவே ஆளுங்கட்சி தரப்பில் கடந்த காலத்தில் ரகளை செய்து அவை முடக்கப்பட்டது என்பதை நாடறியும். நாடாளுமன்றம் தானறியும். இந்த லட்சணத்தில் நாடகம் வேண்டாம் என்று பிரதமர் கூறுவது கேலிக்கூத்தானது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலத் கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவதற்கான எந்தத் திட்டமும் அரசி டம் இல்லை. ஆனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற விபரீதத் திட்டத்தை அரங்கேற்ற ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கான மசோதா கொண்டு வரப்பட இருப்பதாக ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதில் இந்திய மக்கள் நலன் கிஞ்சிற்றும் உண்டா? அது மட்டுமின்றி, கல்வித்துறையை மத்திய மயமாக் கும் உயர்கல்வி ஆணைய மசோதா, அணு சக்தி துறையிலும் கார்ப்பரேட் முதலாளிகளை அனுமதிக்கும் அணுசக்தி மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத் திருத்த மசோதா, பெரு நிறுவன சட்டத் திருத்த மசோதா என உத்தே சிக்கப்பட்டுள்ள அனைத்து மசோதாக்களும் இந்திய மக்களின் நலனுக்கு எதிரானவை.
இந்தியாவை மேலும் மேலும் தாராளமயப் பாதையில் இட்டுச் செல்வதற்கான மசோதாக் களைத்தான் ஒன்றிய அரசு தீட்டி வைத்துக் கொண்டு நாடகம் போடாதீர்கள் என்று வெளி வேசம் போடுகிறது. மாநிலங்களின் வரி வருவாய் வாய்க்கால்களை அடைத்துள்ள மோடி அரசு செஸ் வரிகள் மூலம் மாநிலங்களை மேலும் ஓட்டாண்டியாக்க முயல்கிறது. நாடாளுமன் றத்தை நாடக மேடையாக மாற்றிக் கொண்டிருப் பது மோடி அரசுதான்.
