தேச நலனைத் தாரைவார்க்கும் ஒப்பந்தம்!
இந்தியாவின் இறையாண்மையையும், கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அடகு வைக்கும் விதமாக இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய (EU) தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயம், பால் உற்பத்தி மற்றும் சிறு குறு தொழில்களைக் குறி வைக்கும் ஒரு நவீன காலனித்துவ முயற்சி என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 50 பில்லியன் யூரோக்களுக்கு மேல் மானியமாக வழங்குகின்றன. இத்தகைய மிகை மானியம் பெற்ற ஐரோப்பிய பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் இந்தியச் சந்தைக்குள் பூஜ்ஜிய சதவீத இறக்குமதி வரியுடன் நுழை யும்போது, நமது நாட்டின் 8 கோடி பால் உற்பத்தி யாளர்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகச் சிதையும் அபாயம் உள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப் படும் ‘அறிவுசார் சொத்துரிமை’ (IPR) விதிகள் இந்தியாவின் மலிவு விலை மருந்து உற்பத்தித் துறையை (Generic Drugs) முடக்கும் நோக்கம் கொண்டவை. உலகிற்கே மருந்தகமாகத் திகழும் இந்தியாவின் மருந்துத் துறையை முடக்குவதன் மூலம், பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் ஏகபோக லாபம் ஈட்ட இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது. இவற்றுடன், அரசாங்கக் கொள்முதல் (Govern ment Procurement) தொடர்பான விதிகள், சிறு குறு தொழில்களுக்கு இந்திய அரசு வழங்கி வரும் முன்னுரிமையை ரத்து செய்யக் கோருகின்றன. இது ‘உள்நாட்டு உற்பத்தி’ எனும் முழக்கத் திற்கே வேட்டு வைக்கும் செயலாகும்.
டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமை யான நிபந்தனைகள், இந்தியாவின் கொள்கை முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும். நமது மக்களின் தனிப்பட்ட தரவுகள் கார்ப்ப ரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறும் சூழல் உருவாகும். தொழிலாளர் நலச் சட்டங் களை ‘தடையில்லா வர்த்தகம்’ என்ற பெயரில் நீர்த்துப்போகச் செய்வது, கார்ப்பரேட்டுகளுக் குக் கூடுதல் லாபத்தை ஈட்டித் தருமே தவிர, இந்தியத் தொழிலாளர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தராது. மாறாக, மலி வான இறக்குமதியால் உள்நாட்டுத் தொழிற் சாலைகள் மூடப்பட்டுப் பெரும் வேலைவாய்ப்பு இழப்பே ஏற்படும்.
முதலீட்டாளர்-அரசு தகராறு தீர்வு (ISDS) போன்ற வழிமுறைகள், இந்தியச் சட்டங்களை விடப் பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கின்றன.
எனவே, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இத்தகைய முக்கிய ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், மாநில அரசுகளின் கருத்துக்களைக் கேட்காமல் அவசரகதியில் அமல்படுத்த முயல்வது மக்களாட்சிப் பண்பிற்கு எதிரானது.
