headlines

img

மத்திய காலத்தை நோக்கி...

மத்திய காலத்தை நோக்கி

காதல் திருமணம் செய்து கொள்பவர்களின் குடும்பங்களை புறக்கணிக்க வேண்டும்; அவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கக் கூடாது; வேலைக்கு அழைக்கக் கூடாது; அவர்களது நிலத்தில் யாரும் வேலை க்குச் செல்லக்கூடாது; இதை மீறுபவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் கடும் அபராதம் விதிக்கப்படும்; அவர்களும் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்று ஒரு காணொலி பரவியது அதிர்ச்சியலைகளை ஏற் படுத்தியுள்ளது.

இந்த கொடுமை நடந்திருப்பது பாஜக நீண்ட காலமாக ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான். ரத்லம் மாவட்டம் பஞ்சேவா  எனும் கிராமத்தில் அண்மையில் நடந்த கூட்டத்தில் இளைஞர் ஒருவர் இப்படி அறிவித்தி ருக்கிறார். அந்த காணொலியில் மூன்று குடும்பத் தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுவதால் அந்த குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மட்டுமல்ல அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளது.

இந்த காணொலி வெளியில் பரவியதால் வேறு வழியின்றி மாவட்ட நிர்வாகத்தினரும் காவல்துறையினரும் சென்று விசாரணை நடத்தியதாகவும் இது குறித்து முறையான புகார் அளிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. காணொலியே ஆதாரமாக இருக்கும் போதும் அதில் பேசும் இளைஞர் மூன்று குடும்பத்தினர் பெயர்களை கூறியிருக்கும் போதும் முறையா கப் புகாரை எதிர்பார்த்திருப்பது சரியல்லவே. அச்சத்திலிருக்கும் அந்த மூன்று குடும்பத்தி னரின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத் தர வேண்டிய காவல்துறை கடமையிலிருந்து நழுவு வது நியாயமல்லவே!

வயது வந்த ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதும் மணம் புரிந்து கொள்வதும் இந்திய அரசியல் சாசனப்படியான அவர்களது உரிமை. ஆனால் காதல் திருமணம் செய்வதே தவறு என்று அதற்காகத் தண்டனை விதிப்பது சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்வதல்லவா? இத்த கைய நடவடிக்கைகள் முந்தைய பழமைவாத சாதியச் சிந்தனையல்லவா?

இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகளைத் தாண்டியும் அனைவ ரும் சமம் என்பது ஏட்டளவிலேயே உள்ளது. ஆனால் மநுஸ்மிருதிதான் நாட்டின் சட்டமாக வேண்டும் என்று கூறிய இந்துத்துவாக் கூட்டத் தின் ஆட்சி, காதல் திருமணங்களை ஒழிப்பதற் காகவே வெவ்வேறு பெயரில் சட்டங்களைக் கொண்டு வந்தது. மத்தியப் பிரதேசத்திலும் மதமாற்றத் திருமணம், லவ் ஜிகாத் என்று திசை திருப்பும் காரணம் கூறி, சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனால்தான் இத்தகைய சமூகப் புறக்கணிப்பு அறிவித்தல் பகிரங்கமாக நடை பெறுகிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பழமை வாத மத்திய காலத்தை நோக்கிச் செல்வதற்கு பெயர் வளர்ச்சியுமல்ல; முன்னேற்றமுமல்ல; அவமானம்!