பொருளியல் அரங்கம்
அயல் நாட்டுக் கல்வி: திரும்ப வருகிறார்களா மாணவர்கள்?
1978 க்கும் 2024 க்கும் இடையிலான 46 ஆண்டுகளில் சீனாவில் இருந்து வெளிநாடுகளில் போய் கல்வி கற்றவர்கள் 74.3 லட்சம் பேர். அவர் களில் 64.4 லட்சம் பேர் சீனாவுக்கு திரும்ப வந்து பணியாற்றுகிறார்கள். (தி இந்து ஜனவரி 21, 2026 - குயின் ஜி, சீன தூதர் கட்டுரை) அதாவது வெளிநாட்டுக் கல்வி பயிலும் சீன மாணவர்களில் 86 சதவீதம் பேர் திரும்பவும் தாய் நாட்டுக்கே வந்து பணி புரிகிறார்கள். இந்திய தரவுகளோடு இதை ஒப்பிட்டால்தான் இதன் முக்கியத்துவம் அறிய முடியும். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் போய் படிப்பவர்கள் 2024இல் 13.36 லட்சமாக இருந்துள்ளது. இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து படிப்பதற்கு வரும் மாணவர்களுடன் (50000 பேர்) ஒப்பிடும் போது இது 25 மடங்கு. இந்தியாவில் இருந்து மாணவர்கள் செல்வது அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு. இந்தியாவிற்கு வருவது நேபாளம், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான் போன்ற நாடுகளில் இருந்து. வெளிநாட்டுக் கல்வி நாடிச் செல்பவர்களில் எத்தனை பேர் திரும்பி வருகிறார்கள்? வருவார்கள்? 80% பேர் படிக்கப் போகிற நாட்டிலேயே செட்டில் ஆகி விடுகிறார்கள் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த மாணவர்களின் கல்விச் செலவுக்காக இந்தியாவில் இருந்து வெளியேறும் அந்நியச் செலாவணி விவரம் கீழே... 2018: 12 பில்லியன் டாலர் 2019: 13.5 பில்லியன் டாலர் 2020: 10 பில்லியன் டாலர் 2021: 15 பில்லியன் டாலர் 2022: 16 பில்லியன் டாலர் ஒரு பில்லியன் டாலர் எனில் 9000 கோடி ரூபாய். இப்போது 20 பில்லியன் டாலர்களை தொட்டு இருக்கும். அப்படியெனில் ரூ.1,80,000 கோடி. இவ்வளவு அந்நியச் செலாவணி வெளியேறி இருக்கிறது. 2014 இல் டாலருக்கு ரூபாய் மதிப்பு 60 எனில் இப்போது 90. கல்விக் கட்டணங்கள் உயர்ந்திருப்பது வேறு. அந்நியச் செலாவணியினால் மட்டும் 30 % கட்டணம் கூடி இருக்கிறது. இவ்வளவு விலை கொடுத்தும் வெளிநாடுகளில் இந்தியாவில் இருந்து கல்வி கற்க செல்வோரில் 20% பேரின் ஆற்றலே மீண்டும் நம் நாட்டிற்கு பயன்படுகிறது. இதை விட கூட குறைவாகவே திரும்பி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இது தனி நபர்களின் தேச பக்தி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் ஜூலை 2025 நேர்காணல் ஒன்றில் சஞ்சய் பாரு என்ற அரசியல் நிபுணர் கூறிய வார்த்தைகள் முக்கியமானது. “இந்திய மாணவர்கள் திரும்ப வருவதில்லை. புதிய இந்தியாவை திரும்ப வந்து நிர்மாணிப்பதற்காக செல்கிறோம் என்றும் சொல்வதில்லை... இது மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றிய பிரச்சனை மட்டும் அல்ல; தன் ‘மூளை வளம் மிக்க மக்களை’ (Brainy People) தக்க வைத்திருக்க முடியாமல் ஒரு நாடு தோல்வியடைவது பற்றியதுமாகும்”.
எங்கே போனார்கள் 7.37 லட்சம் குழந்தைகள்?
மத்தியப் பிரதேச பட்ஜெட்டில் படாடோபமாக அறிவிக்கப்பட்ட திட்டம் “பள்ளிக்குச் செல்வோம்!”. ஆனால் டிசம்பர் 2025 தரவுகள் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளன. பள்ளிக் கல்வித்துறை தரவுகளின்படி 7.37 லட்சம் குழந்தைகள் பள்ளிக் கல்வி ஆவணங்கள் அற்றவர்களாக உள்ளனர். பொது நீரோட்ட கல்வியில் அவர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் அவர்கள் சேர்ந்ததாக தெரியவில்லை. தனியார் பள்ளிகளிலும் அவர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. அரசு அதிகாரப் பூர்வமாக இடை நிற்றல் என்று அறிவிப்பது 1.27 லட்சம். 55 மாவட்டங்களில் 3500 அரசுப் பள்ளிகளில் ஜீரோ மாணவர் அனுமதி. 6500 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் அதாவது 10 க்கும் கீழே மாணவர் அனுமதி. இப்படி ஆவணங்களில் காணாமல் போன மாணவர்கள் பழங்குடி மக்கள் நிறைய வாழும் மாவட்டங்களே அதிகம். எங்கே போனார்கள் அந்த 7.37 லட்சம் குழந்தைகள்? “பள்ளிக்குச் செல்வோம்” என்ற அரசின் பட்ஜெட் அறிவிப்பு என்ன ஆனது? தகவல் : “தி மூக்நாயக்” - அங்கித் பௌச்சரி - 28.12.2025 - “MP Dropout Crisis”
