500 % இறக்குமதி வரி அமெரிக்க மசோதா சட்டமானால் ...
ஒரு நாட்டை மட்டும் ஏற்றுமதிகளுக்காக நம்பி இருந்தால் அதன் மிரட்டல்களை நிர்பந்தங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதற்கு அமெரிக்காவின் 500 சதவீத இறக்குமதி வரி மசோதா ஒரு உதாரணம். 2024 ஆம் ஆண்டில் உலகம் முழுமைக்கான இந்தியாவின் ஏற்றுமதி 434 பில்லியன் டாலர். அதில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மட்டும் 79 பில்லியன் டாலர். அதாவது 18 சதவீதம். இந்தியாவின் ஏற்றுமதி நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா தான். அதற்குப் பிறகான பட்டியலில் ஒற்றை இலக்க சதவீத ஏற்றுமதி நாடுகளே உள்ளன. அரபு எமிரேட் - 8.2%; நெதர்லாந்து - 5.6%; சிங்கப்பூர் - 3.6%; சீனா - 3.5 %; பிரிட்டன் - 3.3% அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளில் எலக்ட்ரானிக்ஸ், விலை உயர்ந்த கற்கள், மருந்து, இயந்திரம், எரிபொருள், உருக்கு, ஆடைகள் உள்ளிட்டவை இதே வரிசையில் அடங்கும். 1 கோடி டாலருக்கு மருந்துகள் அடங்கிய கப்பல் இங்கே இருந்து போனால் அங்கே இறங்கும் போது 500 % வரிகளால் 6 கோடி டாலர்களாக அதன் விலைகள் உயர்ந்து விடும். 10 டாலர் மதிப்புள்ள டி சர்ட் இங்கே இருந்து போனால் அங்கே இறங்கும்போது 60 டாலர் என அதன் விலை உயர்ந்து விடும். அமெரிக்கா ஏன் இவ்வளவு மூர்க்கத்தனமாக இந்தியாவை நிர்ப்பந்தம் செய்கிறது? ரஷ்ய எண்ணெய்யை இந்தியா வாங்கக் கூடாது என இறையாண்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது? 18 சதவீதமாக உள்ள இந்தியாவின் அமெரிக்க ஏற்றுமதி சந்தையை இழக்க நேரிட்டால் இந்தியா எத்தனை வர்த்தக ஒப்பந்தங்களை தேட வேண்டியிருக்கும்? எத்தனை நாடுகளின் சந்தை தேவைப்படும் என்பதே? வளர்முக நாடுகள் தங்களின் சந்தைகளை விரிந்ததாக, சொந்த சந்தையை பெரிதும் பலமானதாக, பிராந்திய ஒத்துழைப்புகளை வலிமையானதாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற படிப்பினையை அமெரிக்காவின் அழுத்தம் தருகிறது.
