headlines

img

குடியரசு நாளை கொண்டாடுவோம்!

குடியரசு நாளை  கொண்டாடுவோம்!

இந்தியத் திருநாட்டின் 77ஆவது குடியரசுத் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. விடுதலை பெற்ற நம்முடைய நாடு நமக்கென்று உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்ட நாளாகும் இது. இந்நாளில் அரசியல் சட்டத்தின் விழுமியங்களான ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, பன்முகத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்க உறுதியேற்போம்.

விடுதலைப் போராட்டக் காலத்தில் 1930ஆம் ஆண்டு விடுதலைப் போராட்ட வீரர்கள் ஜனவரி 26ஆம் தேதியை முழுவிடுதலை நாளாக கடைப்பிடித்தனர். அன்று நாடு முழு வதும் விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை வீரியமாக முன்னெடுக்க தேசபக்தர்கள் உறுதி யேற்றுக் கொண்டார்கள். அந்த ஜனவரி 26ஆம்தேதி இந்திய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்ளும் நாளாக தேர்வு செய்யப்பட்டது. 

முழுவிடுதலை என்று முழக்கமிட்ட நாளை குடியரசு நாளாக கொண்டாடுகிற அதேநேரத்தில் விடுதலைப் போராட்டத்தின் போது முழுவிடுதலை என்கிற முழக்கத்தை முதன் முதலில் முன்வைத்தவர்கள் கம்யூ னிஸ்ட்டுகள் என்கிற வரலாற்று உண்மையை மறந்துவிடக் கூடாது. 

இன்றைக்கு ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவான பாஜக நாட்டின் அரசியல் சட்டத்தை மாற்றிவிட்டு அந்த இடத்தில் அநீதிமிக்க மநுஸ்மிருதியையும், அர்த்தசாஸ்திரத்தையும் கொண்டுவரத் துடிக்கிறார்கள். 

அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில்  நீண்டநெடிய விவாதங்கள் நடைபெற்றுள்ளன. பழமைவாத, வலதுசாரி கருத்தோட்டம் கொண்ட வர்களும் அந்த சபையில் இடம்பெற்றி ருந்தார்கள். அவர்கள் பிற்போக்கான வழியில் அரசியல் சட்டத்தை உருவாக்குமாறு அடம்பிடித்தார்கள். அரசியல் நிர்ணய சபையின் வரைவுக்குழுத் தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கர் உட்பட பலரும் பெண் களுக்குச் சொத்துரிமை உள்ளிட்ட அம்சங்களை அரசியல் சட்டத்தில் சேர்க்க பெரும் போராட்டத்தை நடத்தினர். 

ஆர்எஸ்எஸ் அமைப்பு மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தை அப்போதே ஏற்கவில்லை.  மாறாக மநுஅநீதியின் அடிப்படையிலேயே அரசியல் சட்டம் இருக்க வேண்டும் என்று அடம்பிடித்தது. இப்போது அதிகாரத்தில் அமர்ந்துள்ள அவர்கள் அரசியல் சட்டத்தை தலைகீழாக கொட்டிக் கவிழ்க்க முயல்கிறார்கள். அரசியல் சட்டத்ததால் உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளையும் தங்களது கைப்பாவையாக மாற்றுகின்றனர். மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, பன்முகத்தன்மை ஆகிய நான்கு தூண்களின் மீது கம்பீரமாக நிற்கும் அரசியல் சட்டத்தின் விழுமியங்களை பாதுகாக்க குடியரசு நாளில் உறுதிகொள்வோம்.