headlines

img

மானுட சமுத்திரம் நாமென்று கூவுவோம்!

மானுட சமுத்திரம் நாமென்று கூவுவோம்!

விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பணி ஓய்வு பெற்றுள்ளார். ‘காற்றில் ஏறி விண்ணையும் சாடுவோம்’ என்றது பாரதியா ரின் பாட்டு வரிகள். அதை சாத்தியமாக்கியது அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி. 

சர்வதேச விண்வெளி மையத்தில் அதிக காலம் தங்கியிருந்த வீரர்களில் இவர் இரண் டாம் இடத்திலும், வீராங்கனை என்ற வகையில் முதலிடத்தையும் சுனிதா வில்லியம்ஸ் பிடித்துள் ளார். அவரது சாதனைகள் போற்றுதலுக்குரியது.

பணி ஓய்வு பெற்றுள்ள அவர் கூறியுள்ள சிந்த னைகள் உலக மானுடம் கருத்தில் கொள்ள வேண் டியதாக அமைந்துள்ளது. “நமது பூமி பார்க்க மிக அழகாக இருக்கும். விண்ணில் இருந்து பூமியைப் பார்க்கும் போது வாழ்க்கையைப் பற்றிய எண் ணங்கள் மாறுபடும். நாம் அனைவரும் ஒரு கிர கத்தைச் சேர்ந்தவர்கள். நாம் ஒன்றிணைந்து எளி தாக பணியாற்ற வேண்டும் என உணர வைக்கும். பூமியில் மனிதர்களிடையே ஏற்படும் வாக்குவா தங்கள் அனைத்தும் முட்டாள்தனமாகத் தோன்றும்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வரிகளைப் படிக்கும்போது, “அறிவை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வை யால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னை சங்கமமாக்கு, மானுட சமுத்திரம் நான் என்று கூவு” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாட்டு வரிகள் நினைவுக்கு வருகின்றன. 

இந்த பூமிக் கிரகத்தில் எத்தனை எத்தனை  வேறுபாடுகள், வெறுப்புகள், மதத்தின் பெய ரால், இனத்தின் பெயரால், சாதியின் பெயரால், நிறத்தின் பெயரால் மனிதர்களைப் பிரித்து வைக்கிற பெரும் கொடுமை நடந்தேறிக் கொண் டேயிருக்கிறது. மறுபுறத்தில் மனித இனம் நாகரிகமடைந்துவிட்டதாக தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக் கொள்கிறது.

சுரண்டல் வெறி அடங்காத அமெரிக்க ஏகாதிபத்தியம் அடுத்த நாட்டை ஆக்கிரமிக்கத் துடிக்கிறது. எல்லை தாண்டி நாடுகளை கபளீ கரம் செய்ய முனைகிறது. பூமிக் கிரகத்தை உள்ளங்கையில் வைத்து உருட்டி விளையாடத் துடிக்கிறது வல்லாதிக்கம்.

மறுபுறத்தில் பல நாடுகளில் நிறவெறிக் கொடுமைகள் இன்னமும் நிறமிழக்காமல் புதிய வடிவங்களில் கோரமுகம் காட்டுகிறது. மதவெறி யின் பெயரால் சிந்தப்பட்ட மனித ரத்தத்திற்கு அளவில்லை.  இந்தியா உட்பட பல நாடுகளில் மதவெறி சக்திகள் வரலாற்றுச் சக்கரத்தை பின்னோக்கித் தள்ள முயல்கின்றன. 

பிறப்பினால் மனிதர்களை பேதம் பிரிக்கும் வர்ணாச்சிரம அநீதிக்கு வண்ணம் பூச நீதி தேவ தையின் தோட்டங்களில் கூட கள்ளிச் செடி வளர்க்கப்படுகிறது. காதலை தடை செய்ய சாதியெனும் கொடுவாளை பயன்படுத்துகிற கொடூரங்கள் நிகழ்கின்றன. விண்ணிலிருந்து பார்க்கும் போது உலகம் ஒன்று என்ற சிந்தனை தோன்றுகிறது என்று சுனிதா வில்லியம்ஸ் கூறியுள்ளார். பூமியில் வாழும் அத்தனை பேருக்கும் அந்த சிந்தனை உரு வாகுமானால் பூமிக்கிரகம் இன்னும் அழகாகும்.