எல்லை தாண்டும் தொல்லை
அமெரிக்க வல்லாதிக்கத்தின் அடாவடி நடவடிக்கைகளை அவ்வப்போது கண்டிக்க மறுத்ததன் விளைவை பல்வேறு நாடுகள் இப்போது அனுபவிக்கத் துவங்கியுள்ளன. பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் இன ஆக்கிரமிப்புப் போரை அமெரிக்கா முழுமை யாக ஆதரிக்கிறது. பாலஸ்தீன மக்களின் நீதிக் கான போராட்டத்தோடு இணைந்து நிற்க வேண்டிய பல நாடுகள் அமெரிக்காவுக்கு வால் பிடித்தன.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையி லான மோதல் முடிவுக்கு வராமல் நீடிப்பதற்கு அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தான் காரணமாக உள்ளன. உக்ரைனுக்கு அமெரிக்கா வுடன் இணைந்து நேட்டோ நாடுகளும் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன
ஏகாதிபத்தியத்தின் அடிப்படைக் குணமே சுரண்டலும், ஆக்கிரமிப்பும்தான். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டவுடன் உலகளாவிய தனது சேட்டைகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை உறிஞ்சி கொழுப்பதற்காக அந்த நாட்டின் ஜனாதிபதி மதுரோவையும் அவருடைய இணையரையும் கடத்திக் கைது செய்துள்ளது டிரம்ப் நிர்வாகம். அத்துடன் வெனிசுலாவின் நிர்வாகத் தலைவர் நான்தான் என்றும் டிரம்ப் கொக்கரிக்கிறார்.
மேலும் டென்மார்க் வசமுள்ள கிரீன் லாந்தை கைப்பற்ற டிரம்ப் துடிக்கிறார். கிரீன்லாந்தின் எண்ணெய் வளம், எரிவாயு, நிக்கல், கோபால்டு உள்ளிட்ட அரிய கனிம வளங்களை வளைக்க நாக்கை சுழற்றுகிறது டிரம்ப் நிர்வாகம்.
நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் டென்மார்க் இடம் பெற்றுள்ளதால் அந்த நாட்டுக்கு ஆதரவாக நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், பின்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் கிரீன்லாந்துக்கு படைகளை அனுப்பியுள்ளன. இதனால் ஆத்திர மடைந்துள்ள டிரம்ப் டென்மார்க் உள்ளிட்ட எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படவுள்ளதாக மிரட்டுகிறார்.
இந்த நாடுகள் அமெரிக்க மிரட்டலுக்கு அடி பணியப் போவதில்லை என்றும் ஒற்றுமையுடன் எதிர்வினையாற்றப் போவதாகவும் கூறியுள்ளன.
கனடா மீது 35 சதவீத அளவுக்கு வரி விதிக் கப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 சதவீத வரியை விதிப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அதிக வரிவிதிப்புக்கு எதிராக கனடாவில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது டிரம்ப்புக்கு கோபத்தை ஏற் படுத்தி விட்டது என்று கூறி ஊடகங்கள் சிரிக்கின்றன.
இந்தியா மீது அடுத்தடுத்து தொடர்ந்து வரி விதிப்பை அதிகரித்துக் கொண்டே செல்கிறது டிரம்ப் நிர்வாகம். இதை எதிர்த்து மோடி அரசு முனகக்கூடத் தயங்குகிறது. டிரம்ப்பின் அடாவடிக்கு கடிவாளம் போடாவிட்டால் உலக ஒழுங்கே சீர்குலைந்து விடும்.
