அழிவின் பிடியில் மத்தியக் கிழக்கு
ஈரான் நாட்டின் தேசிய இறையாண்மை மற்றும் ஐநா சாசன விதிகளுக்குப் புறம்பாக, சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் போதே, எவ்வித முன்னறிவிப்புமின்றி ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட 40-க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்திருப்பது அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனமான ஏகாதிபத்திய முகத்தை மீண்டும் உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது.
ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தில் அணுசக்தி பிரச்சனையில் ஒப்பந்தம் எட்டப்படும் சூழல் நிலவியபோதே, அதனை வேண்டுமென்றே குலைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கருத்துக்கள், அமெரிக்கா ஒருபோதும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது. அமெரிக்கா இறையாண்மை கொண்ட நாடுகளின் மீது தன் விருப்பப்படி போர் தொடுப்பதை வாடிக்கையாக்கி விட்டது. அண்மையில் வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் கியூபா மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களின் தொடர்ச்சி யாகவே இப்போது ஈரான் மீதான இந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹார்மோஸ்கன் மாகாணத்தில் ஒரு தொடக்கப் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 108 மாணவிகள் உட்பட நூற்றுக் கணக்கான பிஞ்சு உயிர்கள் கொல்லப்பட்டது ஈடுசெய்ய முடியாத போர்க்குற்றமாகும். இது ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீதான கொடூரத் தாக்குதல்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்குச் சென்று தனது பயணத்தை முடித்துத் திரும்பிய சில தினங்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்திருப்பது மிகுந்த கவலைக்குரியது. நமது நீண்டகால நட்பு நாடான ஈரான் மீது நடத்தப்பட்ட இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பை மோடி அரசு வெறும் மௌனத்தாலோ அல்லது ஒப்புக்கு ஒரு அறிக்கையாலோ கடந்துவிடக் கூடாது. இந்தத் தாக்குதல் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பிராந்திய அமைதிக்கும் விடுக்கப்பட்டுள்ள நேரடி அச்சுறுத்தலாகும்.
எனவே, இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை யை இந்திய அரசு எவ்விதத் தயக்கமுமின்றி நிபந்தனையின்றி வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும். ஈரானுடனான நமது வரலாற்று ரீதியான உறவை முன்னிறுத்தி, உடனடியாகப் போரை நிறுத்தி அமைதியைத் திரும்பச் செய்ய சர்வதேச அரங்கில் இந்தியா குரலெழுப்ப வேண்டும்.
