headlines

img

பெண் விரோதிகள்

பெண் விரோதிகள்!

புதுதில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பு இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் அறையப்பட்ட அவமானம். தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி தனது “ஆண்களுக்கு மட்டுமான” செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் - பெண் பத்திரிகையாளர்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்திய அரசியலமைப்பை நேரடியாக அவமதித்து நடந்த  இச்செயலுக்கு மோடி அரசின் பதில் வெறும் மெளனம். வெளியுறவு அமைச்சகம் கைகழுவிக் கொண்டது - “இது தலிபான் அதிகாரிகளின் முடிவு” என்று. 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்களை மனித வாழ்க்கையிலிருந்தே அழித்துக்கொண்டி ருக்கின்றனர். பெண்கள் பல்கலைக்கழகங் களுக்குச் செல்ல முடியாது, பூங்காக்களில் நுழைய முடியாது, தனியாக பயணிக்க முடியாது. மருத்துவமனைகளில் கூட பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை. தலிபான்  “அமல் மற்றும் நன்னடத்தை அமைச்சகம்” பெண்களின் குரலையே பாவம் என்று அறி வித்துள்ளது. இன்று ஆப்கானிஸ்தானில் பெண் ணாகப் பிறப்பது சிறைத் தண்டனைக்குச் சமம்.  ஐக்கிய நாடுகள் சபை இதை “பாலின அடிப்படை யிலான அழிப்புக் குற்றம்” என்று கண்டித்துள்ளது. 

இப்படிப்பட்ட பிற்போக்கு  அரசின்,  பெண் விரோத நடைமுறைகளை இந்தியாவில் அரங்கேற்ற அனுமதித்துள்ளது மோடி அரசு. இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஏனென்றால், ஆர்எஸ்எஸ்-பாஜக சித்தாந்தத்தின் மையத்தி லும் அதே ஆணாதிக்க, பிற்போக்கு கருத்தியல் தான் இருக்கிறது. மனு அதர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் ஆர்எஸ்எஸ், பெண்களை குடும்ப எல்லைக்குள் சிறைவைக்க விரும்புகிறது.

மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலம் விடப்பட்டபோது பிரதமர் மோடி எழுபது நாட்கள் மெளனம் காத்தார். உன்னாவ், கத்வா, ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு களில் குற்றவாளிகளுக்கு பாஜக பாதுகாப்பு வழங்கியது. பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளி களை குஜராத்தில் விடுவித்து வரவேற்றனர். 

தலிபான் ஆட்சியில் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று சட்டம் இயற்றப்படு கிறது. இந்தியாவில் ஹிஜாப் அணிந்த பெண்களை  வகுப்பறைகளிலிருந்து வெளியேற்றுகிறது பாஜக அரசு. இரண்டிலும் அடிப்படை வேறல்ல - பெண்களின் உடல், உடை, வாழ்க்கை மீது ஆணாதிக்க கட்டுப்பாடு. மதவெறி என்ற பெயரிலும் தேசியவாதம் என்ற பெயரிலும் பிற்போக்கு  சக்திகள் பெண்களை முதலில் குறிவைக்கின்றன. ஏனென்றால், பெண்களின் சுதந்திரம் அனைத்து நவீனத்துவத்தின், சமத்துவத்தின் அடையாளம்.

புதுதில்லியில் நடந்த அவமானம் வெறும் நெறிமுறை மீறல் அல்ல. அது இரண்டு பிற்போக்கு சக்திகளின் மெளன உடன்பாடு. இந்தியாவின் பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டுள்ள னர். இது தலிபான்களின் குற்றம் மட்டுமல்ல - இது மோடி அரசின் துரோகமும் கூட.