பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டிரியோ காலமானார்
பொழுது போக்கு மல் யுத்த விளையாட் டான டபிள்யு.டபிள்யு.இ (WWE - காட்சிப் போட்டி) போட்டியின் நட்சத்திரம் ரே மிஸ்டிரியோ (66) உடல்நலக்குறைவால் டிசம்பர் 20 அன்று (இந்திய நேரப்படி டிசம்பர் 21 அதிகாலை) காலமானார். விளையாட்டு உலகில் ரே மிஸ்டிரியோ சீனியர் என அழைக்கப்படும் ஏஞ்சல் லோபஸ் டயஸ் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவரது இறப்புக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் அவர் உயிரிழந்தது உண்மை என மெக்சிகன் மல்யுத்த அமைப்பான லுச்சா லிப்ராவும், ரே மிஸ்டிரியோவின் குடும்பத்தினரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
1976இல் தனது மல்யுத்த வாழ்க்கையைத் தொடங்கிய ரே மிஸ்டி ரியோ சீனியர் 2009இல் ஓய்வு பெற்றார். மீண்டும் 2023இல் ஒரே ஒரு போட்டியில் விளையாடினார். ஆனால் உடல்நலம் ஒத்துழைக்காத காரணத்தினால் அவர் தொடர்ந்து விளையாடவில்லை. இரண்டு ஆண்டுகாலமாக ஓய்வில் இருந்த ரே மிஸ்டிரியோ சீனியர் மாரடைப்பு காரண மாக உயிரிழந்ததாக மெக்சிகோ ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் இல்லை ; 619 உயிரோடு தான் இருக்கிறார்
ரே மிஸ்டிரியோ சீனியரின் மருமகன் ஜூனியர் ரே மிஸ்டிரியோவும் டபிள்யு.டபிள்யு.இ பிரிவில் முக்கிய நட்சத்திரம் ஆவார். சீனியர் ரே மிஸ்டிரியோவை விட ஜூனியர் ரே மிஸ்டி ரியோ மிகவும் பிரபலமானவர். 1990 முதல் 2010 வரை டபிள்யு.டபிள்யு.இ-யில் அதிக ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் என்ற பெருமைக்குரியவர். “முகமூடி நாயகன்”, “619 - ரே மிஸ்டிரியோ” என ரசிகர்கள் அழைப்பார்கள். இந்தியாவிலும் ஜூனியர் ரே மிஸ்டிரியோவுக்கு பிரம்மாண்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில், சீனியர் ரே மிஸ்டிரியோ மரணமடைந்த தகவல் விளையாட்டு உலகில் முதலில் தவறான தலைப்புச் செய்தியாக உருவெடுத்தது. அதாவது இறந்தது “ஜூனியர் ரே மிஸ்டிரியோ - 619” என முதலில் செய்திகள் வெளியாகின. அதன்பிறகு குடும்பத்தினர் மூலம் இறந்தது சீனியர் ரே மிஸ்டிரியோ என உறுதிப்படுத்தி, மீண்டும் விளக்கத்துடன் சீனியர் ரே மிஸ்டிரியோ உயிரிழந்ததாக ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியது. இருவரும் முகமூடி அணிந்து விளையாடியதன் மூலம் தவறான தகவல் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
ராபின் உத்தப்பாவுக்கு பிடிவாரண்ட்
இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்டரும், விக்கெட் கீப்பருமான ராபின் உத்தப்பாவுக்கு கர்நாடகா காவல் துறை பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பரபரப் பை ஏற்படுத்தி உள்ளது.
கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றப் பின் ராபின் உத் தப்பா செஞ்சுரிஸ் லைப் ஸ்டைல் பிராண்ட் பிரை வேட் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவன ஊழியர்களின் பிஎப் கணக்கில் (வருங்கால வைப்பு நிதி) இருந்து 23 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக வழக்கு உள்ளது. இதுதொடர்பாக பிஎப் பிராந்திய ஆணையர் எஸ்.கோபால் பிடிவாரண்ட் பிறப் பித்தார். மேலும் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கர்நாடகா மாநிலத்தின் புல கேசிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளார். இந்த புகாரில் ராபின் உத்தப்பா விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.