கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
தென் கொரியாவின் சன்சியான் நகரில் பால்மா ஸ்டேடியத்தில் கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த தென் கொரிய ஓபன் சூப்பர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகளான லக்ஷயா சென், எச். எஸ். பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் பி.வி. சிந்து உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பி.வி.சிந்து, அமெரிக்காவின் லாரன் லாம் மோதினர். 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, அமெரிக்காவின் லாரன் லாமை 21-15 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில், பால்மா ஸ்டேடியத்தில் மலேசியாவின் டேரன் லியூவை 22-20 21-11 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் வீழ்த்தினார்.
சமீபத்தில் சுவிஸ் ஓபன் பட்டத்தை வென்ற மூன்றாம் நிலை வீராங்கனையான சிந்து, அடுத்ததாக ஜப்பானின் அயா ஓஹோரியை சந்திக்கிறார்.
அதே நேரத்தில் உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற ஐந்தாவது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்த், இஸ்ரேலின் மிஷா சில்பர்மேனை எதிர்கொள்கிறார்.
நேற்று நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் வெண்கல பதக்கம் வென்ற லக்ஷயா சென் மற்றும் மாளவிகா பன்சோட் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.