facebook-round

img

ராமர் கோயிலும் ரயில்வே வேலையும்! - க.கனகராஜ்

கடந்த இரண்டு மூன்று தினங்களாக ரயில் மறியல், ரயில் பெட்டிகள் எரிப்பு, காவல்துறையினர் அருகில் உள்ள லாட்ஜ்களில் அத்துமீறல் என்று பீகார் கதி கலங்கிக் கொண்டிருக்கிறது.

ரயில்வே துறையில் வேலைக்கு ஆள் எடுப்பதற்கு ரயில்வே தேர்வு வாரியம் ஒரு ஆரம்ப கட்ட தேர்வை நடத்துகிறது. 35,000 காலிப்பணியிடங்களுக்கு 1.25 கோடிப் பேர் தேர்வு எழுதி இருக்கிறார்கள். எல்லா நிலைகளிலும் இருக்கக் கூடியவர்களுக்கு ஒரே ஆரம்பத் தேர்வு என்ற அடிப்படையைக் கொண்டு வேலைக்கு ஆள் எடுப்பது என்று ரயில்வே தேர்வு வாரியம் முடிவு செய்திருக்கிறது.

முன்பெல்லாம் முதல்நிலைத் தேர்வில் வடிகட்டி பிரதான தேர்வு எழுத ஒரு பணியிடத்திற்கு 10 பேர் என்ற விகிதத்தில் ஆட்களை எடுத்து இருக்கிறார்கள்.

பின்னர் ஒரு பணியிடத்திற்கு 15 பேர் என்கிற முறையில் எடுத்திருக்கிறார்கள்.

இந்த முறை 35,281 பணியிடங்களுக்கு 20 பேர் என்கிற முறையில் 7 லட்சத்திற்கும் அதிகமானவர்களை தேர்வு வாரியம் தேர்வு செய்ததாக அறிவித்தது.

ஆனால், உண்மையில் இது 7 லட்சம் பேர் அல்ல; வெறும் மூன்றரை லட்சம் பேர் தான் என்று தேர்வு எழுதியவர்கள் சொல்கிறார்கள். காரணம் +2 தேர்ச்சி போதும் என்கிற வேலைகளுக்கும் , பட்டப்படிப்பு முடித்தவர்களும் தேர்வு எழுதி இருக்கிறார்கள். இந்த காரணத்தினால் ஒவ்வொரு பதவிக்கும் உரிய முறையில் 1:20 என்று தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிறது தேர்வு வாரியம். ஆனால் அது 1:20 அல்ல , உண்மையில் 1:10 (3.84 லட்சம்) அளவுக்குத்தான் வருகிறது. ஏன் என்றால் ஒட்டுமொத்தமாக உயர்நிலை பணிக்கு தகுதியான ஒருவர் கடைசி நிலை தேர்வு வரை ஆறு பதவிகளுக்கும் போட்டியிடுவதற்கு தகுதியானவராக கருதப்படுகிறார். இதனால் ஆறு நிலை பணிகளுக்கான தேர்வு பட்டியலிலும் அவரது பெயர் இருக்கும். சிலருக்கு 5 பணி நிலைகளுக்கான பட்டியலிலும், சிலருக்கு நான்கு பணி நிலைகளுக்கான பட்டியலிலும் இப்படியே சிலருக்கு ஒரே ஒரு பணி நிலைக்கான பட்டியல் மட்டும் இருக்கும். எனவே, ஏழு லட்சம் பேரை தேர்வு செய்திருப்பதாக சொல்வது உண்மையல்ல என்று தேர்வர்கள் சொல்கிறார்கள்.

அப்படிப் பார்த்தால் ஒட்டுமொத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சம் என்று சொன்னாலும் கூட உண்மையில் மூன்றரை லட்சம் பேர் மட்டும்தான் இரண்டாம் நிலை தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இது முழுக்க முழுக்க எல்லா வேலைகளுக்குமே பட்டதாரியாக இருக்கிறவர்களை மட்டுமே எடுப்பதற்கான முயற்சி. அது தங்களுக்கு வேண்டியவர்களை எடுப்பதற்கான முயற்சி என்கிற முறையில் இந்த முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் ஒரு ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் என்று ஆரம்பித்து, ஒரு ரயிலின் 3 காலி பெட்டிகளை கொளுத்துவது என்பது வரை நீண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் காவல்துறை மிகக் கடுமையாக எச்சரித்திருக்கிறது. தேர்வு வாரியமும் எச்சரித்திருக்கிறது. "இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு பணிக்கும் சேர முடியாதபடி அவர்கள் கருப்பு ஆடுகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்" என்றெல்லாம் மிரட்டி பார்த்த பிறகும் இந்தப் போராட்டங்கள் நிற்பதாக இல்லை. அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்று கருதுகிற மாணவர்களை அருகிலிருந்த லாட்ஜூகளிலெல்லாம் தேடித்தேடி வேட்டை நடத்தி இருக்கிறது காவல்துறை.

இதையொட்டி இந்தப் போராட்டம் பீகாரிலிருந்து உத்திரப் பிரதேசத்திற்கும் பரவுகிற நிலைமை வந்திருக்கிறது. இந்த காரணத்தினால் வேறு வழியின்றி இப்போது தேர்வு வாரியம் அதாவது அரசாங்கம் இறங்கி வந்திருக்கிறது.

5 பேர் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, ஒட்டுமொத்தமாக, இந்த தேர்வு முறை உட்பட அனைத்தையும் விரிவாக விசாரித்து தீர்வு கண்ட பிறகே இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறது.

இதற்கான முக்கிய காரணமாக என்ன சொல்லப்படுகிறது என்றால் இந்த போராட்டம் பீகாரில் இருந்து உத்திரப் பிரதேசத்திற்கும் பரவி இருக்கிறது. எனவே தேர்தல் நேரத்தில் இது மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதை ஒட்டி அதீதமாக எல்லை தாண்டி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மூன்று காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது ஒரு செய்தி....

அடுத்த செய்தி, நேற்றைய (27.01.2022) இந்து பத்திரிகையின் நடுப்பக்கத்தில் உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து சீமாஷிஷ்டி என்பவர் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். இந்த கட்டுரையில் கடந்த தேர்தல்களில் ஜாதியை வைத்து பாரதிய ஜனதா எப்படியெல்லாம் அது தனது சித்து விளையாட்டை மேற்கொண்டது என்பதை குறிப்பிட்டு... மண்டல் கமிஷனுக்கு பின்பாக அதனுடைய பலனை அனுபவித்து அடுத்தகட்ட பலனுக்காக இளம் தலைமுறையினர் பொறுமையற்று இருந்தது. அப்போது மோடி ஒரு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து வந்தவர் என்கிற காரணத்திற்காக தங்களுக்கான நம்பிக்கையை அவர் மீது வைத்தது. இதன் காரணமாக 2014 தேர்தலில் 18 வயது முதல் 25 வரை உள்ள வாக்காளர்களில் 68 சதவீதம் பேர் வாக்களித்தார்கள் என்றும், இவர்களில் 35 சதவீதம் பேர் பாஜகவுக்கு தான் வாக்களித்தார்கள் என்றும் அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.

தலித் மற்றும் ஓபிசி பிரிவினர் மோடியின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்ததாகவும் ஆனால் இந்த பகுதியினருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய சிறு, குறு தொழில்களும் இதர சுய வேலை வாய்ப்புகளும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஜி.எஸ்.டி. அமலாக்கம் மற்றும் கொரானா பாதிப்புகளால் இவர்களுடைய பொருளாதாரம் தான் பாதிக்கப்பட்டதாகவும்.. எனவே ராமர் கோயில் பிரச்சனை என்பதை எல்லாம் தாண்டி தங்கள் வாழ்வாதார பிரச்சினை இருப்பதன் காரணமாகத்தான் இவர்கள் எல்லாம் தற்போது பாஜக-வுக்கு மாற்றாக சமாஜ்வாதி கட்சியை நோக்கி செல்கிறார்கள் என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த இரண்டு அம்சங்களும் ஒரு விஷயத்தை தெளிவு படுத்துகின்றன. அடையாள அரசியல், ராமர், ஜாதி, மதம் இவற்றை எல்லாம் தாண்டி அவர்களுடைய வாழ்வாதாரப் பிரச்சனைகள் முன்னுக்கு வருகிறபோது இந்த திசை திருப்பும் கோஷங்களுக்கு அப்பால் தங்கள் வாழ்க்கையை தேடிக் கண்டுபிடிப்பதற்காக இளைஞர்கள் உண்மையான பிரச்சனையில் அக்கறை காட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இந்த இரண்டு செய்தியும் ஒன்றைச் சொல்கிறது ராமர், கடவுள், இந்து அல்லது முஸ்லிம் எதிரி என்பதை எல்லாம் தாண்டி வாழ்க்கை வேலை, பொருளாதாரம் என்பது ஒரு நிரந்தரமான தீர்வு காணப்படாத வரை எத்தனை பிரிவினைவாத கோஷங்கள் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றை பின்னுக்குத்தள்ளி... வாழ்வதற்கான வேட்கை உண்மையான பிரச்சனைகள் நோக்கி அவர்களை கொண்டு வந்து விடுகிறது என்பதுதான். இதர பிரச்சனைகள் சில நேரங்களில் முன்னுக்கு வரும் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் வர்க்கப் பிரச்சினைகள் தங்கள் வலுவை இழந்து விடவே முடியாது. அதை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒரு கட்சி இருக்கிறதா? ஒரு இயக்கம் இருக்கிறதா? என்பதை எல்லாம் தாண்டி அது வாழ்க்கையின் தேவையில் இருந்து எழுகிறது. எனவே, வர்க்க பிரச்சினைகள் எதைப் போட்டு மூடினாலும் அது தீவிரம் பெருகிற போது அந்த மூடப்பட்ட எல்லாவற்றையும் எரித்துக் கொண்டு கிளம்பும் ஒரு முக்கிய பிரச்சனையாக எழுந்து நிற்கிறது.

இதன் பொருள் ஜாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது மத பெருமிதம் கொண்டவர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட அடையாளம் மட்டுமே முக்கியமான அம்சம் என்று உணர கூடியவர்கள் எல்லோரும் தங்களுடைய வாழ்க்கைக்கான பிரச்சனையை ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நேருக்கு நேர் நின்று பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதுதான். எனவே வர்க்கப் போராட்டம் என்பது வாழ்க்கைக்கான போராட்டம். வாழ்க்கைக்கான போராட்டத்தை வேறு எதற்கான போராட்டத்தாலும் நிரந்தரமாக திசை திருப்பிவிட முடியாது என்பதை இந்த இரண்டு சம்பவங்களும் அதிலும் குறிப்பாக உத்தர பிரதேசத்தை மையப்படுத்தி ஒரு விழிப்பை உருவாக்கி இருக்கின்றன என்பதுதான் உண்மை.

https://indianexpress.com/.../explained-controversy.../

https://indianexpress.com/.../bihar-railway-recruitment.../

;