election2021

img

இடஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் செங்கொடி.... அரூர் சிபிஎம் வேட்பாளர் ஏ.குமார் வாக்குசேகரிப்பு...

அரூர்: 
இடஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து குரல் கொடுத்து செங்கொடி இயக்கத்தின் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என அரூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிவேட்பாளர் ஏ.குமார் அரூர் ஒன்றியத்தில் வாக்குசேகரிப்பின் போது கூறினார்.

தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில், அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட நேதாஜி நகர், தண்டகுப்பம், அழகிரிநகர், எட்டிப்பட்டி, ஊத்துப்பட்டி, அக்ரகாரம், சமத்துவபுரம், நெருப்பாண்டகுப்பம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டகிராமங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஏ.குமார் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, பல்வேறு இடங்களில் பெண் வாக்காளர்கள், நீங்கள் எம்எல்ஏவாக வந்து எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சனையை  தீர்த்து வைக்க வேண்டும் என அன்போடு வேண்டுகோள் வைத்தனர். விளாம்பட்டி அருந்ததியர் காலனி மக்கள், அருந்ததியினருக்கான 3 விழுக்காடு ஒதுக்கீட்டை தனி ஒதுக்கீடாக பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதேபோல, மோரசப்பட்டி கிராம மக்கள், தங்கள் பகுதிக்கு இருமுறை மட்டுமே அரசு பேருந்து வந்து, செல்கிறது. இதனால் மாணவ,
மாணவியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. எனவே, கூடுதலாக அரசுபேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வேட்பாளர் குமார், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் சட்டமன்றத்தில் இதற்காக குரல் கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார்.

இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மேரி, ஏழுமலை, திமுக அரூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் வேடம்மாள், முன்னாள் ஒன்றியச் செயலாளர் தேசிங்குராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.சிட்டிபாபு, கொமதேக மாவட்டச் செயலாளர் எம்.கே.செந்தில், ஒன்றியச் செயலாளர் பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச்செயலாளர் ஜானகிராமன், ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன், தொகுதிச் செயலாளர் ஷாக்சன் சர்மா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.