election2021

img

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த எடப்பாடி பச்சை துண்டு போட்டால் மட்டும் விவசாயி ஆகிவிட முடியாது....

இந்திய நாட்டின் பெரும் முதலாளிகளுக்கு ஏக போகமாக பொதுத்துறை நிறுவனங்களை அடகு வைத்துக் கொண்டிருக்கும் பாஜக- அதிமுக கூட்டணிக்கு முடிவு கட்டக் கூடிய ஒரு நாளாக தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் உள்ளது. அதிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை என்று அறிவிக்கக் கூடிய ஒரு நாளாக இன்றைக்கு உள்ளது. தமிழக அதிமுக அரசு ஏதோ ஒரு மிகப்பெரிய வளர்ச்சி கொண்டு வந்துவிட்டதாக மிகப்பெரும் பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கின்றது. 

ஏற்கனவே 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் உங்களுக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்துள்ளனர். சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் உங்களுக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுப்பார்கள்.  மக்களாகிய நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் உங்களுடைய தொகுதிக்கு மட்டும் அல்ல, தமிழ்நாட்டுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினராக சு. வெங்கடேசனை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். இன்றைக்கு அவர் மதுரைக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டான நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து செயல்பட்டு வருகிறார்.  அதிமுக அறிவித்துள்ள வேட்பாளர் செல்லூர் ராஜுவும் மற்ற வேட்பாளர்களும் கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி  கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கவில்லை. 

அரசு மணல் கொள்முதல் நிலையத்தில் ஒரு க்யூபிக்மண் விலை 510 ரூபாய். ஆனால்  வெளியில் விற்பனைக்கு வரும்போது 50 ஆயிரம் ரூபாய் வரை உயருகிறது. இதில் இடைத்தரகராக அதிகாரிகள் மற்றும் அதிமுகவினர் அதிகம் உள்ளனர்.இவைகளை கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கையை அதிமுக அரசு எடுத்துள்ளது. இன்றைக்கும் மக்கள் சொந்த வீடுகள் இன்றி புறம்போக்கு இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவற்றுக்கு பட்டா கொடுக்க வழியில்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. விலைவாசி அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கேஸ் விலையை பார்த்தால் அடுப்பு இருக்கிறதோ இல்லையோ மக்களினுடைய வயிறு எரிந்து கொண்டிருக்கின்றது.  வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட பெட்ரோல், டீசல் விலை என்பது உயரவில்லை. உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகின்றது. மத்திய அரசு  பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியைரத்து செய்தால் சுமார் 26 ரூபாய் வரை விலை  குறைந்துவிடும். மாநில அரசு பெட்ரோல் மீதான வரியை குறைத்தால் ரூ. 36 வரை விலை குறையும். இதைப்பற்றி யோசிக்காத ஆட்சியாளர்கள் தான் இன்றைக்குமத்தியிலும் மாநிலத்திலும் உள்ளார்கள்.  இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செல்லும் இடங்களிலெல்லாம் நான் ஒரு விவசாயி என்று கூறி வருகிறார். பச்சைத் துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் ஆகிவிட முடியாது.  கடந்த நான்கு மாதங்களாக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென்று விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல் அந்த சட்டங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துவிட்டு நான் விவசாயி என்று கூறி வருகிறார்.   

விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மத்திய பாஜக அரசுடன்  கூட்டணி வைத்துக்கொண்டு நான் ஒரு விவசாயி என்று கூறுகின்ற தார்மீக உரிமைகூட எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது.  இன்றைக்கு புதுச்சேரியில் என்ன நிலை உள்ளது. அதுதான் நாளை அதிமுகவிற்கு . எனவே தமிழகத்தில் ஒரு ஆட்சி மாற்றம் உண்டாக வேண்டும் .அதற்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதுரை மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் சி. சின்னம்மாளை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 ஆவது வார்டு கிளைகள் சார்பில் காமராஜர் தெரு பாலு படிப்பகத்தில்  மார்ச் 22 திங்களன்று பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரக்கூட்டத்திற்கு கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர் ஆர். வாசுதேவன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், பகுதிக்குழு  செயலாளர் கு. கணேசன், திமுக நிர்வாகிகள் பாண்டி, குணசேகரன் ஆகியோர் பேசினர்.  சிபிஎம் தொகுதி பொறுப்பாளர் இரா. லெனின், திமுக வட்டச் செயலாளர்கள் சோலை செந்தில், நாகஜோதி சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கிளைச் செயலாளர் வி. மணிகண்டன் நன்றி கூறினார். பிரச்சாரக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதிலிருந்து...