தர்மபுரி மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் பெயர் கே.பி.அன்பழகன். உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்து என்ன சாதித்தார் என்று தேடித் தேடிப் பார்க்கிறேன். ஒன்றும் கிடைக்கவில்லை. உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்து நீட்டை அனுமதித்தார். அதாவது அனிதா உட்பட பல மாணவ - மாணவியர்கள் இந்த ‘நீட்’டினால் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். அதைத்தான் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.
நாம் எதிர்க்காமல் இருந்திருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தை கபளீகரம் செய்திருப்பார்கள். அந்தத் துறை மீது அக்கறை இல்லாத ஒரு அமைச்சர் யார் என்றால் அது அன்பழகன்தான்.அந்தத் துறைக்குத்தான் ஒன்றும் செய்யவில்லை என்று பார்த்தால், இந்தத் தொகுதிக்கு - தர்மபுரி மாவட்டத்திற்கு ஏதாவது செய்து இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டத்தை தி.மு.க. கொண்டு வந்தது. ஆனால் அந்த திட்டம் மூலம் இப்போது தருமபுரிக்குத் தண்ணீர் வருகிறதா? தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை வைத்து தருமபுரி மாவட்டத்தில் 15 ஊராட்சிகள் பயனடையும் என்று சொன்னார். அதைச் செய்தாரா? அலியாளம் அணையில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவோம் என்று சொல்லி 10 வருடம் ஆகிவிட்டது. அவ்வாறு செய்து கொடுத்திருக்கிறாரா? வத்தல் மலையைச் சுற்றுலாத்தலமாக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆணை பிறப்பித்தார்கள். ஏதாவது நடந்து இருக்கிறதா? தருமபுரி தொழிற்பேட்டை என்ன ஆனது? இளைஞர்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான ஆக்கப்பணிகளில் இதுவரையில் ஈடுபட்டிருக்கிறார்களா?
பாலக்கோடு தொகுதியில் எண்ணேகொல்புதூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை வாய்க்கால் மூலமாக தும்பலஅள்ளி அணைக்கு கொண்டு வருவதாக சொன்னார். அவ்வாறு செய்தாரா?எனவே அவர் துறையிலும் ஒன்றும் செய்யவில்லை. அவரை தேர்ந்தெடுத்த தொகுதிக்கும் ஒன்றும் செய்யவில்லை. இந்த மாவட்டத்திற்கும் எதுவும் செய்யவில்லை.எதற்கும் உபயோகம் இல்லாதவரை வைத்துக் கொண்டிருக்கலாமா? அவர் மட்டுமல்ல, எல்லா அமைச்சர்களும் அப்படித்தான். இவர்களுக்கு தலைமை வகித்து கொண்டிருக்கும் ஒருவர் இருக்கிறார், முதலமைச்சர்.
அவருக்கு எவ்வாறு பதவி கிடைத்தது என்று சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும். அவர் படிப்படியாக வளர்ந்து வந்தாராம். ஸ்டாலின் மாதிரி திடீரென்று வளர்ந்து வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.படிப்படியாக வந்தாரா? ஊர்ந்து வந்தாரா? தவழ்ந்து வந்தாரா? சசிகலா காலில் விழுந்தீர்களா? இல்லையா? முதலில் அதைச் சொல்லுங்கள்.விவசாயிகளை காப்பாற்றி விட்டதாக, வேளாண்மையைச் செழிக்க வைத்து விட்டதாகப் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
அவர் விவசாயி அல்ல, போலி விவசாயி. போலி விவசாயியாக இருக்கும் மிஸ்டர் பழனிசாமி அவர்களே… நீங்கள் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவே முடியாது. எவ்வளவுதான் விளம்பரம் கொடுத்தாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எவ்வாறு மந்திரத்தால் மாங்காய் வரவழைக்க முடியாதோ, அதேபோல எவ்வளவு விளம்பரத்தாலும் இந்த மண்ணை செழிக்க வைக்க நிச்சயம் முடியாது.விளம்பரத்தால் விவசாயி ஆகிவிடலாம் என்று நினைக்கிறீர்கள். இது விவசாயிகளுக்கு கேவலம். எப்போது பார்த்தாலும் விவசாயி விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பச்சைத் துண்டு போட்டுக் கொண்டிருக்கும், விவசாயிகளுக்கு பச்சை துரோகியாக அவர் நடந்து கொண்டிருக்கிறார். இதை நிச்சயம் விவசாயிகள் மறக்கமாட்டார்கள்.
மத்திய ஜல்சக்தித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், அதிகாரமில்லாத அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை ஆக்கி, டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்திருப்பவர்தான் இந்த பச்சைத் துண்டு பழனிசாமி. சேலம், தருமபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்ட விவசாயிகளும் இப்போது நிம்மதியாக இல்லை. குடிமராமத்து என்று சொல்லி மணல் கொள்ளையை நடத்தி போலி பில் போட்டு கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஆட்சிதான் இந்த போலி விவசாயியாக நடித்துக்கொண்டிருக்கும் பழனிசாமியின் ஆட்சி. கரும்பு டன் ஒன்றுக்கு 200 ரூபாய் ஊக்கத்தொகை தி.மு.க. ஆட்சியில் கொடுத்தோம். இப்போது 137 ரூபாயாகக் குறைந்து விட்டார்கள்.
அதேபோல விவசாயிகளுக்கு பல ஆண்டுகளாக நிலுவைத் தொகையைக் கொடுக்காமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறார்கள். நெல் கொள்முதல் செய்ய லஞ்சம், அவ்வாறு செய்தாலும் முழுமையாக செய்யவில்லை.புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு இன்னமும் இழப்பீடு தர வில்லை. இது அனைத்திற்கும் மேலாக இலவச மின்சாரத்தை ரத்து செய்ய துடிக்கும் மத்திய அரசிற்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கும் அடிமை ஆட்சிதான் பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி.
மீட்டரை பொருத்தி மத்திய அரசு விவசாயிகளிடம் பணம் வாங்க போகிறார்கள். மூன்று வேளாண் சட்டத்தை ஆதரித்த, வேளாண் விரோத அ.தி.மு.க. அரசை நீங்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
**********
பாமகவின் ஏஜெண்ட் முனுசாமி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தந்த அந்த உரிமையோடு உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். இந்த மாவட்டத்தில் ஒருவர் இருக்கிறார். இந்த தொகுதியில் ஆளும் கட்சியின் சார்பில் நிற்கிறார். அமைச்சராக இல்லாமலேயே அமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கே.பி.முனுசாமி.
அம்மையார் ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்தபோது, பொதுக்குழு நடந்த நேரத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷமிட்டார்கள். அதற்குப் பிறகு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, ‘கே.பி.முனுசாமியைப் பற்றிதான் கோஷமிடுகிறார்கள். எல்லாவற்றிலும் 30 சதவிகிதம் கமிஷன் வாங்குகிறார். அதனால் அவருக்கு 30 சதவிகிதம் முனுசாமி என்று பட்டம் சூட்டி இருக்கிறார்கள்’ என்று சொன்னார்கள்.அடுத்த நிமிடமே அவரது அமைச்சர் பதவியை அம்மையார் பறித்து விட்டார். இப்போது அவர் மறைவிற்குப் பிறகு அவருக்கு ஒரு புது வாழ்க்கை கிடைத்திருக்கிறது.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும் என்று சொல்லி அவருடைய நினைவிடத்தில் தியானம் செய்து பத்திரிகையில் பேட்டி கொடுத்தார். அவருடன் கே.பி.முனுசாமி ஒட்டிக்கொண்டார்.
அதற்குப் பிறகு இதே கிருஷ்ணகிரியில் 2018 மார்ச் மாதம் உண்ணாவிரதம் இருந்தார். அந்த உண்ணாவிரதத்தில் வீர வசனம் பேசினார். அதன்பிறகு கட்சியில் பதவி கொடுத்தார்கள். எம்.பி. பதவியும் கிடைத்தது. அந்த பதவிகள் கிடைத்தவுடன் அம்மையார் ஜெயலலிதா மரணத்தைப் பற்றி வாய்திறக்கவில்லை. அதைப்பற்றி மறந்துவிட்டார்.எனவே பன்னீரையும், பழனிசாமியையும் மிரட்டி பதவி வாங்கி விட்டார். அதற்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அவர் அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.
மீண்டும் அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுத்து இருக்கிறார்கள். இதற்கிடையில் இப்போது எம்.எல்.ஏ. சீட் கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவரை நாம் தோற்கடிக்க வேண்டுமா? வேண்டாமா?
கே.பி.முனுசாமி அ.தி.மு.க.வுக்கு துணை நிற்கிறாரோ இல்லையோ… பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு ஏஜெண்டாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றி விசாரணை வேண்டும் என்று சொல்லி இதே கிருஷ்ணகிரியில் உண்ணாவிரதம் இருந்தபோது, “ஜெயலலிதாவின் மரணத்தை வெளிக் கொண்டு வரும் முயற்சியில் யாராவது ஈடுபடவில்லை என்றால் அவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவார்கள்” என்று சொன்னவர் அவர். அவ்வாறு சொன்ன கே.பி.முனுசாமி இந்த தேர்தலில் காணாமல் போகப் போகிறார். அதுதான் உண்மை. அதுதான் உறுதி.
************
அதிமுக ஆட்சி ஒரு ஊழல் கேபினட்
இதுவரையில் இருந்த அரசுகளிலேயே ஊழல் மிகுந்த அரசு 1991-96-இல் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க.
தான். ஆனால் இப்போது அதையெல்லாம் தாண்டி பழனிசாமி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் இந்த ஆட்சி தான் படுபயங்கரமான ஊழல் ஆட்சியாக இருக்கிறது.கமிஷன் - கரப்ஷன் – கலெக்சன் இதனையே தொழிலாக கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடிய சர்வாதிகார ஆட்சி இது.முதலமைச்சர் பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைத்துறையில், 3,000 கோடிக்கு மேல் அவருடைய சம்பந்தி, சம்பந்தியின் சம்பந்திக்கு டெண்டர் விட்டதில் ஊழல் நடந்திருக்கிறது.துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் உள்ளன. அமெரிக்க நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சர்வீஸ் நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் போடுகிறார்கள். அந்த ஒப்பந்தம் போடப்பட்ட நேரத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. டாலரில் லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள் என்று அந்த நிறுவனமே நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு இருக்கிறார்கள்.
உள்ளாட்சித் துறை – ஊழல் ஆட்சித் துறை அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சித் துறையின் மூலமாக தெருவிளக்கு மாற்றுவதில், ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதில், கொரோனா காலத்தில் பல கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.மின்சார அமைச்சர் தங்கமணி அவர்கள்,நிலக்கரி இறக்குமதியில் ஊழல், காற்றாலை ஊழல், மின் கொள்முதலில் ஊழல், உதிரிபாகங்கள் கொள்முதல் செய்வதில் ஊழல் எனப் பல கோடி ரூபாய் அவர் துறையில் ஊழல் நடந்திருக்கிறது.மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஜெயகுமார் அவர்கள், மீனவர்கள் பாதுகாப்புக்காக வாங்கும் வாக்கி டாக்கியில் கொள்ளை அடித்திருக்கிறார்.வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், பாரத் நெட் டெண்டரில் ஊழல் செய்திருக்கிறார்.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் குட்கா விஜயபாஸ்கர், குட்காவை காவல்துறையினர் துணையோடு சதவிகிதக் கணக்கில் கமிஷன் வாங்கிக்கொண்டு தாராளமாக விநியோகிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார். அதில் கோடி கோடியாக கொள்ளை அடித்து இருக்கிறார். குவாரி ஊழல், கொரோனா தடுப்புக்கான கொள்முதலில் ஊழல் என அவரது ஊழல் பட்டியல் மேலும் நீள்கிறது.உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கொரோனா காலத்தில் மத்திய அரசிடமிருந்து வந்த அரிசியை கொள்முதல் செய்ததில்கோடி கோடியாக கொள்ளை அடித்து இருக்கிறார்.எனவே, ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஒரு ஊழல் கேபினட் தான் இப்போது இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, சேலம் மாநகரம், ஆத்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து...