கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராளி, ஊழல் எதிர்ப்பு, தகவல் அறியும் உரிமைச்சட்ட செயற்பாட்டாளர் என அறியப்பட்டவர் அகில் கோகோய். 46 வயதாகும் இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு, அசாம் பாஜககூட்டணி அரசால் தேசத் துரோககுற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார்.
இதனிடையே, ராய்ஜோர் தள் என்ற புதிய கட்சியை நிறுவிய அகில் கோகோய், சிறையில் இருந்தபடியே அசாமின் சிப்சாகர் தொகுதியில் போட்டியிட்டார். எனினும், ஒருமுறைகூட வெளியில் வந்து பிரச்சாரம் செய்ய வாய்ப்பில்லாத அகில், சிறையில் இருந்தபடியே பலதிறந்த மடல்களை தொகுதி மக்களுக்கு எழுதினார். அதில்,தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் பற்றி குறிப்பிட்டு, ஆதரவு திரட்டினார். அகிலுக்காக அவரது 85 வயதான தாயாரும், பிரபல சமூக சேவகர் மேதா பட்கர், சந்தீப் பாண்டே உள்ளிட்டோரும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அகில் கோகோய் 57 ஆயிரத்து 219 வாக்குகளைப் பெற்று,பாஜக வேட்பாளர் சுரபி ராஜ் கோன்வாரியை 11 ஆயிரத்து 875 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.