tamilnadu

img

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி

3ஆவது அடுக்கு பிரிந்த போது தொழில்நுட்பக் கோளாறு

ஸ்ரீஹரிக்கோட்டா, மே 18- இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி சி-61 என்ற செயற்கைக்கோள் ஞாயி றன்று (18-05-25) அதிகாலை 5:59 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.  இந்த ராக்கெட்டில் சுமார் 1,696.24 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-09 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு இருந்தது. இதன் மூலம் நாட்டின் பரந்த நிலப்பரப்பில் நிகழ் நேர புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெற முடியும். மேலும் அனைத்து வானிலை தரவு களை விண்வெளியில் இருந்து உட னுக்குடன் அனுப்பும் திறன்களை இந்த செயற்கைகோள் கொண்டிருந்தது.  இந்நிலையில், இந்த திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில்,”விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்து சென்ற பிஎஸ்எல்வி  சி-61 ராக்கெட்டில் 2 அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்த நிலையில், மூன்றாவது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி முழுமையாக ஆய்வு செய்து தெரிவிக்கப்படும்” என அவர் கூறினார்.

232ஆவது கிலோமீட்டரில்...

இஸ்ரோவின் 101ஆவது செயற்கைக்கோளான பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் 232ஆவது கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சரியான பாதையில் பயணிக்க முடியவில்லை. இதனால் வெடித்துச் சிதறியுள்ளது என முதற்கட்ட வானிலை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.