சென்னை:
தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் பாஜக- அஇஅதிமுக கூட்டணியை முறியடிப்போம். திமுக தலைமையிலான மதச்சார்பற்றமுற்போக்குக் கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம் என அனைத்து தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இதுதொடர்பாக தமிழகத்தின் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கெடுப்பு, ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெறுகிறது. கடந்த பல ஆண்டுகளாக தொழிலாளர்களுடைய உரிமைகளை காப்பதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். தொழிலாளர் உரிமைகளை மதிக்கிற அரசை தேர்ந்தெடுப்பதற்கும், தொழிலாளர்கள் பங்களிப்பு செலுத்த வேண்டும்.
வெறும் சக்கையாக 4 சட்டத் தொகுப்புகள்
மத்திய அரசை பாரதிய ஜனதா கைப்பற்றியதிலிருந்து, தொழிலாளர்கள் உரிமைகள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. 150ஆண்டுகள் போராடிப் பெற்ற 44 தொழிலாளர் சட்டங்களில் சாற்றை உறிஞ்சிவிட்டு, வெறும்சக்கையாக 4 சட்டத் தொகுப்புகளை, பாரதியஜனதா அரசு நிறைவேற்றிவிட்டது. முதலாளிகள் விரும்பினால், தொழிலாளியை வேலைக்கு வைக்கலாம்; வேண்டாமென்றால் விலக்கி விடலாம். கோரிக்கை எழுப்பினால், தொழிற்சங்கம் வைக்க நினைத்தால் வேலைநீக்கம் செய்வதற்கு, புதிய சட்டங்கள் தாராளமாக இடம் கொடுக்கின்றன. அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட், ஃபிக்ஸட் டெர்ம் எம்பிளாய்மெண்ட் ஆகியவற்றை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து இருப்பதால், இனி நிரந்தர வேலை என்பது இல்லாத நிலைஉருவாக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுடைய ஊதியத்துக்கும், வேலைக்கும் உத்தரவாதம் அகற்றப்பட்டு விட்டது.
சீரழிக்கப்படும் நல வாரியங்கள்
கட்டுமான, கட்டிட மற்றும் அமைப்பு சாராதொழிலாளர்களுக்கு நீண்டகாலமாகப் போராடிப் பெற்ற சட்டங்களையும், நல வாரியங்களையும் மத்திய அரசுச் சட்டம் சீரழிக்கிறது. மாநிலச் சட்டங்களை ஒழித்து நலவாரியஅதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது.நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமாக இருந்த பொதுத்துறை நிறுவனங்கள், இட ஒதுக்கீடு மூலம் சாமானியர்களுக்கும் வேலை தந்து கை தூக்கி விட்டன; நாட்டுக்குஏராளமான லாபத்தை அள்ளிக் கொடுத்தன; நாட்டுப் பொருளாதாரத்தை நிலைநிறுத்தி, உள் கட்டமைப்புகளை மேம்படுத்தின. இந்திய நாட்டை தன் சொந்தக் காலில் நிற்கவைத்தன.
பல லட்சம் பேரின் வேலை பறிப்பு
இன்று ரயில்வே, பிஎஸ்என்எல், எல்ஐசி, பொதுக் காப்பீடு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், நிலக்கரி சுரங்கங்கள், சேலம்ஸ்டீல், என்எல்சி, பிஎச்இஎல், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ஏர் இந்தியா, பாரத்பெட்ரோலியம், ஓஎன்ஜிசி, ராணுவத்துக்கான ஆயுதங்களை உற்பத்தி செய்யும் பாதுகாப்பு தொழிற்சாலைகள் என பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பணிபுரிந்த பல லட்சம் பேர் வேலைஇழந்திருக்கிறார்கள்.
பொதுத்துறைகள் அனைத்தையும் முற்றாக விட்டுவிடுவதே தமது கொள்கை என நிதியமைச்சர் கூறிவிட்டார். பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி வரி ஆகியவை, தொழில்களை சீரழித்து உள்ளன. கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான கொள்கைகளால் நடுத்தர சிறு, குறு தொழில்களில் 30 சதவீத தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. மீதம்இருப்பவையும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மூடப்படும் நாளை நோக்கி நகர்கின்றன. மின்சாரத்தை தனியார் மயமாக்கி, ஏஜென்சிகள் மூலம் மின் விநியோகம் செய்யமின்சாரத் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. விவசாயத்துக்கு இலவச மின்சாரம் இனி இருக்காது. விசைத்தறி, கைத்தறி மற்றும் பொதுமக்களுக்கு கிடைத்து வந்த சலுகை மின்சாரம் பறிபோகிறது.
மோட்டார் வாகனச் சட்டம்
மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டுவிட்டது. வாகனங்களைப் பழுது பார்க்க இனிஅந்தந்த வாகன உற்பத்தியாளர்களிடமே மக்கள் செல்ல வேண்டும். பழுது பார்க்கும்செலவு பல மடங்கு உயரும். ஆட்டோ ஒர்க் ஷாப்புகள், உதிரிபாகங்கள் இருக்கும் கடைகள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி எல்லாமும் மூடப்படும். லாபமீட்டும் வழித்தடங்கள் எல்லாம் தனியாருக்கு தரப்படும். மக்களின் வசதிக்கேற்ப இயங்கும் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆட்படும்.
நாசமானது தமிழகத் தொழிலாளர் துறை
பாஜக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் அனைத்தையும், தமிழ்நாட்டைஆண்ட அதிமுக அரசு மறுப்பு இல்லாமல் ஏற்றது. தொழில் வளர்ச்சியிலும் தொழிலாளர்நலனை பாதுகாப்பதிலும் இந்தியாவில் முன்வரிசை மாநிலமாக இருந்த தமிழகத்தின் மரபுகளை சீர்குலைத்தது. தனதுசொந்த லாபங்களுக்காக மாநில உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தது.சிறப்பாக செயல்பட்டு வந்த மாநில அரசின்தொழிலாளர் துறையை, அஇஅதிமுக ஆட்சிதிசை தவறி இயக்கியது. தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு ஆலோசனை கூறும் முதலாளிகள் நலத்துறையாக மாற்றியது. தொழிலாளர் துறையிலிருந்து பிரிக்கப்பட்ட ஆய்வகத் துறை, எந்தச் சட்டத்தையும் அமலாக்க மறுத்து ஆதிக்க முதலாளிகளுக்கு ஆரத்தி சுற்றியது. குறைந்தபட்ச ஊதியச் சட்டம், தொழிற்சாலைச் சட்டம், பணி நிரந்தரத் தகுதி வழங்கும் சட்டம், பத்திரிக்கையாளர் சட்டம்போன்றவை வெறும் நன்னெறிக் குறிப்புகளாக சுருக்கப்பட்டுவிட்டன. இவற்றை அமலாக்க எள் முனையளவும் மாநில அரசு முயற்சிக்கவில்லை.
கடந்த ஐந்தாண்டுகளில், அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து ஒரு முறை கூட தொழிலாளர் அமைச்சர் பேசவில்லை. ஆனால், முதலாளிகள் கூட்டம் பலமுறை நடத்தப்பட்டு முதல்வரும், தலைமைச் செயலாளரும் பங்கேற்றுள்ளனர். உயர்மட்ட முத்தரப்பு அமைப்பான மாநிலத் தொழிலாளர் ஆலோசனை வாரியம் உள்ளிட்ட எந்த முத்தரப்பு அமைப்பும், சென்ற பத்தாண்டுகளில் முறையாக, விதிகளுக்கு இணங்க கூட்டப்பட்டதில்லை.தொழிலாளர் நல வாரிய நிதி, தொழிலாளர்களுக்குப் போய் சேருவதைத் தடுத்து பலவகைகளில் சூறையாடப்படுகின்றன; திட்டமிட்டுக் கொள்ளையிடப்படுகின்றன.வாரியத்தில் ‘ஆன்லைன்’ முறையில் தொழிலாளர்களைப் பதிவதாகக் கூறி, தரமில்லாத மின்னியல் தொகுப்பு (சர்வர்) பலலட்சக்கணக்கான ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளது. அன்றாடம் உழைத்து ஊதியம் ஈட்டி குடும்பம் நடத்தும் கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்கள் கணினி மையங்கள் முன்பு நாளெல்லாம் காத்துக் கிடக்க நேரிடுகிறது. பதிவு செய்வது, புதுப்பிப்பது, நல நிதி வழங்குவது என எல்லாவற்றிலும் ஏற்படும் தாமதங்களையும், தவறுகளையும் கணினி மீது தூக்கிப் போட்டுவிட்டு தொழிலாளர் துறை பொறுப்பில்லாமல் ஒதுங்கிக் கொண்டது.
தமிழர்களுக்கு வேலை மறுப்பு
மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வடமாநிலத்தவர் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். பாஜகஆளும் மாநிலங்களில் 85% வேலைவாய்ப்புகளை அந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கேதரவேண்டும் என்று சட்டமியற்றி இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. வடமாநிலத்தவர்களுக்கே காண்ட்ராக்டுகள் தரப்பட்டு, அதற்கான பணியாளர்கள் வடமாநிலத்திலிருந்து தருவிக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுவதை உயர்நீதிமன்றமே கண்டித்து இருக்கிறது. ஆனால், மாநிலத்தை ஆளும் அஇஅதிமுக அரசு இதை தடுப்பதற்குதவறியது மட்டுமல்லாமல், மாநில அரசுப் பணிகளிலும் வேறு மாநிலத்தவரை பணி நியமனம் செய்யும் வகையில் விதித் திருத்தம்செய்து செயல்படுத்துகிறது. ‘மாதிரி வேலை அளிப்பவராக’ திகழ வேண்டிய தமிழ்நாடு அரசு தனக்குக் கீழ் பணிபுரிபவர்களை முதலாளிகளை விட கொடுமையாக நடத்தியது. அரசுப் பணியாளர்களின் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. ஆஷா,சத்துணவு ஊழியர், டாஸ்மாக் பணியாளர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க மறுத்தது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அலட்சியம் செய்தது. மருத்துவர்களின் போராட்டத்தை ஈவிரக்கமின்றி பழிவாங்கி ஒடுக்கியது.
தொழிலாளர் விரோத அரசுகள்
கடந்த ஏழு ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதாவும் 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சியில் உள்ள அஇஅதிமுகவும் செய்துள்ள தொழிலாளர் விரோதச் செயல்கள் எண்ணற்றவை. அந்த இரு கட்சிகளும் சேர்ந்து, தமிழ்நாடு அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு இந்த தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன. எனவே, பாஜக-அஇஅதிமுக கூட்டணியைஒரு தொகுதியில் கூட வெற்றி பெற விடாமல்தடுப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும். இதற்கு எதிரான மாற்றுக் கொள்கைகளோடு தேர்தல் களம் காணும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே, பாஜக-அதிமுகவை வெல்லுகிற ஆற்றலுள்ளது. எனவே, தொழிலாளர் உரிமைகள் இன்னும் சிதைக்கப்படாமல் பாதுகாக்கவும்.இழந்த உரிமைகளை ஒவ்வொன்றாக மீட்கவும், இந்தப் பொதுத் தேர்தலில் திமுகதலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும், இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக களப்பணி ஆற்றுமாறும் தமிழ்நாட்டு தொழிலாளர்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.