புதுதில்லி, ஏப்.18-மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற வியாழக்கிழமையன்று பல மாநிலங்களிலும் மக்கள் வரிசையில் பெரும் திரளாக நின்று தங்கள் வாக்குரிமையைச் செலுத்தினார்கள். பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.நாட்டில் 11 மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மொத்தம் 95 மக்களவைத் தொகுதிகளுக்கு வியாழனன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் வேலூர் தவிர மற்ற 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.இதுதவிர, கர்நாடகாவில் 14 இடங்களுக்கும் மகாராஷ்ட்ராவில் 10 இடங்களுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 8 இடங்களுக்கும், அஸ்ஸாம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா 5 இடங்களுக்கும், சத்தீஸ்கர் மற்றும் மேற்குவங்கத்தில் தலா மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீரில் இரு தொகுதிகளுக்கும், மணிப்பூரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. மேலும் ஒடிசா மாநிலத்தில் மொத்தம் நான்கு கட்டங்களாக நடைபெறும் சட்டமன்றத்தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு வியாழனன்று நடைபெற்றது. புதன்கிழமையன்று ஒடிசா மாநிலத்தில் கந்தமால் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரி ஒருவரை மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொன்றனர்.அஸ்ஸாம், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாகச் செயல்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் மே 19 அன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணும் பணி மே 23 அன்று நடைபெறுகிறது. (ந.நி.)