election-2019

img

அம்மாவின் ஆட்சியை அடிமையாட்சியாக்கிய ஓபிஎஸ், இபிஎஸ்

கோவை, மார்ச். 30 -

அம்மாவின் ஆட்சியை அடிமையாட்சியாக மாற்றி தமிழகத்தை தலைகுனியவைத்த ஓபிஎஸ்,இபிஎஸ் ஆட்சியை விரட்ட வேண்டும் என வாக்கு சேகரிப்பு பயணத்தில் கோவை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் மக்களிடையே உரையாற்றினார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். தீவிர வாக்கு சேகரிப்பு பயணத்தில் மேற்கொண்டு வரும் இவர் சனியன்று கோவை வடக்கு சட்டமன்றத்திற்குட்பட்ட தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு பயணத்தை மேற்கொண்டார்.

கோவை கே.கே.புதூர் மாநகராட்சி பள்ளி முன்பு துவங்கிய வாக்கு சேகரிப்பு பயணத்தில் திமுக மாநகர் மாவட்ட பொருப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமை தாங்கினார். இப்பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கணபதி சிவக்குமார், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் பிரேம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன், ஐஜேகே மணிமாறன், முஸ்லிம் லீக் முகமது பசீர் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சார பயணத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உரையாற்றினர். முன்னதாக கே.கே.புதூரில் துவங்கிய வாக்கு சேகரிப்பு சுற்றுப்பயணம் வெங்கட்டாபுரம், வேலாண்டிபாளையம், கணபதிலேஅவுட், தடாகம் சாலை, கலாமன்றம், கோவில்மேடு, கோகுலம்காலணி, இந்திராநகர், பி.என்.புதூர் சீரநாயக்கன்பாளையம், செட்டிபாளையம், பூசாரிபாளையம், கல்வீரம்பாளையம், மருதமலை, திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வடவள்ளியில் நிறைவு செய்தார்.

முன்னதாக இந்த வாக்கு சேகரிப்பு பயணத்தில் ஈடுபட்ட பி.ஆர்.நடராஜன் பேசுகையில், ஆண்டுக்கு இரண்டு கோடிப்பேருக்கு வேலை கொடுப்பேன் என்று சொன் மோடி இருக்கிற சிறுகுறு தொழில்களை ஒழித்து வேலைவாய்ப்பை பறித்துள்ளார். வங்கியில் 15 லட்சம் போடுவேன் என்று சொல்லி இப்போது கேபிள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி பெண்களிடம் இருந்த பணத்தை பறிக்கிற வேலையை செய்துள்ளார். ஐந்தாண்டு காலமும் பொய்யை மட்டுமே பேசி ஆட்சியை கடத்திய ஒரே பிரதமர் மோடி. இதுபோன்ற ஒரு பிரதமர் இனிவரக்கூடாது என மக்கள் வெளிப்படையாக பேசுகிற புதிய வரலாற்றை உருவாக்கிய மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும். இதேபோல அம்மாவின் ஆட்சி என்று மேடைதோரும் பேசி வந்த எடப்பாடி, ஒபிஎஸ் வகையறாக்கள் மோடி அமித்ஷாவிடம் அடகு வைத்து அடிமை ஆட்சியாக அம்மாவின் ஆட்சியை மாற்றியுள்ளனர். தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்து, மிகப்பெரிய கட்சியாக உள்ள அதிமுக கட்சியின் ஓபிஎஸ், இபிஎஸ் அமித்ஷா முன்னாள் கைகட்டி வாய்பொத்தி நிற்கிறார்கள். தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திய இந்த அடிமை ஆட்சியை விரட்ட ஒரே வாக்கில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அமைதியை வலியுறுத்தும் வேட்பாளரான என்னை தேர்ந்தெடுக்க வேண்டும். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் புதிய ரயில்கள், மேம்பாலங்கள், சமூக கூடங்கள், சத்துணவு மையங்கள், பால்வாடி மையங்கள், குடிநீர் தொட்டிகள், நூலகங்கள் என கட்டியுள்ளேன். இதற்கான நீண்ட பட்டியலை ஆதாரத்துடன் வெளியிட முடியும், இந்த தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் இவர்கள் கட்சியின் வாஜ்பாய் பிரதமராக இருந்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாரே ஏதாவது ஒன்றை ஆதாரமாக கட்டமுடியுமா என்று கேள்வி எழுப்பினார். என்னை எந்த நேரத்தில் அழைத்தாலும் வருகிற மக்கள் ஊழியனாக இருக்கிறேன். சிபிஆரை சந்திப்பதற்கே பல நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆகவே மக்கள் ஊழியனான என்னை அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் என உரையாற்றினார்.

முன்னதாக இந்த பிரச்சார பயணத்தில் திமுகவின் வ.ம.சண்முக சுந்தரம், வ.ச.குப்புசாமி, முஇர. செல்வராஜ், சி.பி.தீபா, மெட்டல்மணி, கே.எம்.தண்டபாணி, காங்கிரஸ் கே.ஏ.கருப்புசாமி, கர்த்திக், மதிமுக மு.இராமநாதன், மு.கிருஷ்ணசாமி,, பெ.முருகேசன், சிபிஐ ஜேம்ஸ், சி.தங்கவேலு, அஸ்ரப்அலி, விசிக ந.ஏழுமலை, கொமதேக ஆறுமுகம், விசிக கோவை சம்பத், ஐஜேகே பூரண சந்திரன், திவிக கவிஞர் ரகுபதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கூட்டணி கட்சிகளின் ஊழியர்கள் வாக்கு சேகரிப்பு பயணத்தில் பங்கேற்றனர். முன்னதாக பல்வேறு இடங்களில் பொதுமக்கள், பெண்கள் தன்னெழுச்சியாக வந்து வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆராத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 

;