கோவையில் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் பி.ஆர் நடராஜன் எம்.பி உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து 500 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 2010 ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் சிங்காநல்லூர் SIHS காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கு அரசாணை வெளியிட்டு அதற்குண்டான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த 2011 ம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு SIHS காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்குண்டான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இந்த SIHS காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் பணிகள் கடந்த எட்டு வருடங்களாக முடங்கிக் கிடக்கிறது. தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால், கவனக் குறைவால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போக்குவரத்துக்கு வேறு வழியின்றி தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆகவே பொதுமக்களின் நலன் கருதி தொடங்கப்படாமல் இருக்கின்ற மேற்கண்ட ரயில்வே உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க இந்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளாததை கண்டித்து வெள்ளியன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் SIHS காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் அருகில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது. திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இதைத்தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்