economics

img

இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை குறைத்தது ஐஎம்எப்... 2021-22 நிதியாண்டில் ஜிடிபி 9.5 சதவிகிதத்தைத் தாண்டாது....

புதுதில்லி:
இந்தியப் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கணிப்பை ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank), கடந்த வாரம் 10 சதவிகிதமாக குறைத்திருந்தது.முன்னதாக 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 சதவிகிதமாக இருக்கும் என்று கூறியிருந்த நிலையில், அந்தக் கணிப்பை மாற்றிக்கொண்டது. 2021-2022 நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் 5.5 சதவிகிதம் வரையில் உயரும் என்றும் அது கூறியிருந்தது.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியமும் (International Monetary Fund - IMF) 2021-22 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரவளர்ச்சிக் கணிப்பை 9.5 சதவிகிதமாக குறைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில் 12.5 சதவிகித அளவு வளர்ச்சியை, இந்தியப் பொருளாதாரம் அடையும் என்று ஐஎம்எப் மதிப்பிட்டிருந்தது. ஆனால், தற்போது அதனை சுமார் 3 சதவிகிதம் குறைத்துக் கொண்டுள்ளது.கொரோனா இரண்டாம் அலைபாதிப்பைத் தொடர்ந்து இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் மாதம் முதலே இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள சர்வதேச நாணய நிதியம் அமெரிக்கா 7 சதவிகிதம், ஜெர்மனி 4.6 சதவிகிதம், பிரான்ஸ் 3.6 சதவிகிதம், ஜப்பான் 2.8 சதவிகிதம், இங்கிலாந்து 7 சதவிகிதம், கனடா 6.3 சதவிகிதம் என்றஅளவில் வளர்ச்சியடையும் என் றும் கணிப்பை வெளியிட்டுள்ளது.இந்திய பொருளாதாரம் 2-ஆவது அலையில் பெரிய அளவில் பாதிக்கவில்லை என்று ஒன் றிய பாஜ அரசு கூறினாலும், சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து 2022ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பைத் தொடர்ந்து குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

2022-2023 நிதியாண்டைப் பொறுத்தவரை, இந்தியப் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று ஐஎம்எப் மதிப்பிட்டுள்ளது. இது முந்தையக்கணிப்பிலிருந்து 1.6 சதவிகிதம் அதிகமாகும்.

;