economics

img

வராக்கடன் 22 ஆண்டுகளில் இல்லாத அதிகரிப்பு? 2021 செப்டம்பரில் 14.8 சதவிகிதமாக உயரும் அபாயம்...

புதுதில்லி:
இந்திய வங்கிகளின் வராக்கடன் அளவு, 2020-ஆம் ஆண்டை விடவும், 2021-இல் இரண்டு மடங்கு உயரும் ஆபத்துஉள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை குறித்த அரையாண்டுக்கான அறிக்கையை, ரிசர்வ் வங்கி கடந்த திங்களன்று வெளியிட்டுள்ளது. அதில், 2020 செப்டம்பர் 30 அன்று இந்திய வங்கிகளின் மொத்த கடன் அளவில் வராக் கடன் 7.5 சதவிகிதமாக இருந்தநிலையில், 2021 செப்டம்பர் 30 அன்று 13.5 சதவிகிதமாக உயரும். இதுவே 2021 -2022 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவில் 14.8 சதவிகிதமாக உயரும் என்று தெரிவித்துள்ளது.அவ்வாறு உயரும் பட்சத்தில், அது கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச வராக்கடன் அதிகரிப்பாக இருக்கும்என்று குறிப்பிட்டுள்ள ரிசர்வ் வங்கி, மோசமான விளைவு காத்திருக்கிறது (worst is behind us) என்றும் எச்சரித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்த அளவில், வராக் கடன் அளவு,(Non-Performing Asset- NPA) 2020 ஜூலை - செப்டம்பர் மாதங்களில் 9.7 சதவிகிதத்திலிருந்து 2021 ஜூலை - செப்டம்பர் மாதங்களில் 16.2 சதவிகிதமாக உயர வாய்ப்புள்ளது.இதுவே தனியார் வங்கிகளில் 4.6 சதவிகிதம் என்ற அளவிலிருந்து 7.9 சதவிகிதமாகவும், இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளின் வராக்கடன் 5.4 சதவிகிதத்திலிருந்து 7.9 சதவிகிதமாகவும் உயரும் என்று குறிப்பிட்டுள்ள ரிசர்வ் வங்கி, இந்தத் திடீர் வராக் கடன் உயர்வுக்கு கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் சுற்றுலா, ஹாஸ்பிடாலிட்டி, கட்டுமானம், ரியல் எஸ்டேட், விமானப் போக்குவரத்து, ஆட்டோமொபைல் மற்றும் சில்லரை வணிகத் துறைகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வர்த்தகப் பாதிப்புதான் முக்கியக் காரணம் எனவும் தெரிவித்துள்ளது.வராக்கடன் பாதிப்பால் வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.