கும்பகோணம், நவ.20 - ஜீவாதார கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து எல்லைக்குட்பட்ட அனைத்து டாக்சி-வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளன மாநில பொருளாளர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினர், கும்பகோணம் வட்டார டாக்சி, வேன் ஓட்டுநர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசு சுற்றுலாத்துறை சார்பில் கோவில்களுக்கு சென்று வரக்கூடிய வகையில் திட்டங்களை உருவாக்கி, அதில் உள்ளூர் சுற்றுலா ஆட்டோ, டாக்ஸி, வேன் வாகனங்களை இணைத்து இயக்கும் வகையில் புதிய சட்டத்தை ஏற்படுத்த வேண்டும். நவக்கிரக சுற்றுலா பேருந்து திட்டத்தை கும்பகோணம் வட்டார டாக்சி, வேன் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில், வாரத்தில் ஒரு நாள் ஒரு பேருந்து என திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். நவகிரக சுற்றுலா ஆன்லைன் முன்பதிவில் உள்ளூர் சுற்றுலா வாகனங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் திட்டத்தை உருவாக்க வேண்டும். நவக்கிரக அரசு பேருந்துகளுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் உள்ளூர் சுற்றுலா வாகனங்களுக்கும் வழங்க வேண்டும். சொந்த வாகனங்களை சட்டவிரோதமாக சுற்றுலா வாகனமாக இயக்கும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.