மயிலாடுதுறை, ஜன.30- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தரங்கம்பாடி, செம்பனார்கோவில் ஒன்றியக் குழுக்கள் சார்பில், நூறுநாள் வேலையை முழுமையாக வழங்கிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நூறு நாட்களும் வேலை வழங்குக, நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகளை உடனடியாக வழங்கிடுக, புதிய வேலை அட்டைகளை வழங்கிடுக, அனைத்து பேரூராட்சிகளுக்கும் நூறுநாள் வேலையை வழங்கிடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் வீ.எம். சரவணன் தலைமையில் நடந்த போராட்டத்தில், மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி.மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் அம்மையப்பன், விவசாய தொழிலாளர் சங்க தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் தமிழ்வாசகம், செம்பனார்கோவில் ஒன்றியத் தலைவர் ஜி.கருணாநிதி, தரங்கம்பாடி ஒன்றிய தலைவர் என். பாலகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் என். செல்வபாக்யவதி உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக 200 க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை முழங்கியவாறு பரசலூர் மேலமுக்கூட்டிலிருந்து பேரணியாக புறப்பட்டு, செம்பனார்கோவில் மெயின்ரோடு, கீழமுக்கூட்டு, ஊராட்சி மன்ற அலுவலகம் வழியாகச் சென்று, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வந்தடைந்தது. திருச்சி திருச்சி புறநகர் மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு, வடக்கு ஒன்றிய அஇவிதொச சார்பில், திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் எஸ்.தெய்வநீதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அஇவிதொச மாநில பொருளாளர் அ.பழநிசாமி, சிபிஐஎம் தெற்கு ஒன்றியச் செயலாளர் குருநாதன், வடக்கு ஒன்றியச் செயலாளர் ரவிக்குமார், அஇவிதொச வட்டத் தலைவர் பெரியசாமி, சங்கத்தின் துணைத் தலைவர் முருகேசன், துணைச் செயலாளர் ராமமூர்த்தி முத்துக்குமரன், மாவட்டக்குழு உறுப்பினர் மகாலிங்கம், தவிச வட்ட தலைவர் கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில் ஒன்றிய தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் பிரகாஷ், ஒன்றியச் செயலாளர் வீரசேகரன் விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் முத்துச்செல்வன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் டிவி.காரல்மார்க்ஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, எஸ்.சாமிநாதன், 100 க்கும் மேற்பட்ட மாவட்ட ஒன்றிய, நகர, கிளை தோழர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
முற்றுகை
மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மேற்கு ஒன்றியச் செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நடராஜன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர் பூமாலை, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் முருகேசன், ஒன்றிய தலைவர் மனோகர், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் நல்லையன் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு அதனை மாவட்ட ஆட்சியரின் மூலம் அரசுக்கு அனுப்பி வைத்து பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. முசிறி ஒன்றியம் புலிவலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காஜா மொய்தீன், சிஐடியூ முத்து ஆகியோர் தலைமை வகித்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன், முசிறி சிபிஎம் ஒன்றியச் செயலாளர் அசோக், கோமதி, அப்துல் ரஹ்மான், புஷ்பராணி, சாமிநாதன், சாந்தி, சரோஜா, சின்னப்பிள்ளை, லெட்சுமி, அப்துல் காதர்பாஷா உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அந்தநல்லூர்
விவசாய தொழிலாளர்கள் சங்க அந்தநல்லூர் ஒன்றியக்குழு சார்பில் வியாழனன்று அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட தலைவர் தங்கதுரை, மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண்ணா, மாவட்டப் பொருளாளர் இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் ஜோதிமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.