மயிலாடுதுறை, பிப்.24- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினர் கோரிக்கை களை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரோடு இருக்கும்போதே மாற்றுத்திறனாளிகளை, இறந்து விட்டதாகக் கூறி உதவித்தொகை யினை நிறுத்தி வைப்பதை உடனடியாக விடுவிக்க கோரி நடந்த போரட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.கணேசன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பி. ஜீவா, மாவட்டச் செயலாளர் எம். புரு ஷோத்தமன், மாவட்டப் பொருளாளர் ஜி. லெட்சுமி, மாவட்டத் துணைத் தலைவர் டி. கோவிந்தசாமி, மாவட்ட துணைச் செயலாளர் எம். சொக்க லிங்கம், மாவட்டத் துணைத் தலைவர் யூ. ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ். பாரதிராஜா மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு கோரிக் கைகளை முன் வைத்து உரையாற்றி முழங்கினர். வீடு, மனை, பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கிடு. கடும் மாற்றுத்திறனாளிகள் பெற்று வந்த மாத உதவித் தொகை, பல்வேறு காரணங்கள் சொல்லி ஆறு மாதங்களுக்கு மேலாக மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, நிறுத்திய காலத்தில் இருந்து உதவித்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 400-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் காலை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, அங்கேயே மதிய உணவும் உண்டு போரட்டத்தை தொடர்ந்தனர். 6 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடந்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுக் கொள்ளாத நிலையில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கைகளை நேரில் முறையிடச் சென்ற மாற்றுத் திறனாளிகளை காவல் துறையினர் அடாவடித்தனமாக தடுத்து, ஆட்சியரை சந்திக்க விடாமல் வாயிற் கதவுகளை மூடியதால், முற்றுகை போரட்டமாக தொடர்ந்து நடைப்பெற்றது. இதன் பின்னர், ஆட்சியரை சந்திக்க அனுமதியளிக்கப்பட்டது. அதனால், 7 மணி நேரத்திற்கும் மேலாக மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.