districts

img

திருவெறும்பூர் பர்மா காலனி, திடீர் நகர், காவேரி நகர் குடியிருப்புகளை ரயில்வே நிர்வாகம் அகற்ற முயல்வதா?

திருச்சிராப்பள்ளி, பிப்.24-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் பகுதிச் செயலாளர் மணிமாறன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ரவிக்குமார் தலைமையில், திருவெறும்பூர் பர்மா காலனி, திடீர் நகர், காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், திங்களன்று, தெற்கு ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு கொடுக்க திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வந்தனர்.  அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனையடுத்து, நடந்த பேச்சு வார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி.வெற்றிச்செல்வம், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், நிர்வாகிகள் சங்கர் பாண்டியன், சந்தோஷ், ஜாகிர், கண்ணகி, பார்த்தி ஆகியோர் கொண்ட குழுவை மட்டும் அனுமதித்தனர். அவர்கள் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பர்மா காலனி, திடீர் நகர், காவேரி நகர் பகுதிகளில், கடந்த நான்கு தலைமுறையாக 315 குடும்பங்களைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு உள்ளிட்டவற்றைப் பெற்று வசித்து வருகின்ளனர்.  இந்நிலையில் மேற்கண்ட வீடுகளை வரும் 4 ஆம் தேதிக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும் எனவும், இல்லையென்றால் 5 ஆம் தேதி வீடுகள் அகற்றப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், வேறு வழியின்றி தவித்து வரும் அப்பகுதி மக்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க, தாங்கள் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ரயில்வே கோட்ட மேலாளர் இதுகுறித்து, ரயில்வே நிலம் சார்ந்த அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க அறிவுறுத்தினார். பின்னர், இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அப்பகுதி மக்களிடம் விளக்கிக் கூறி, நாளை ரயில்வே நிலம் சார்ந்த அதிகாரியிடம் மனு கொடுக்க உள்ளோம் என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.