districts

திருச்சி முக்கிய செய்திகள்

பிரசாந்த் கிஷோர் மந்திரவாதியல்ல! காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் பேட்டி

புதுக்கோட்டை, பிப்.11-  வெற்றி தோல்வியை மக்கள்தான் முடிவு செய்வார்கள். பிரசாந்த் கிஷோர் மந்திரவாதியல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டியில்,  அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நடிகர் விஜயை சந்தித்திருக்கிறார். வாக்களிப்பது மக்கள்தான். அவர்கள்தான் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்வார்கள். பிரசாந்த் கிஷோர் மந்திரவாதியல்ல, மாய வித்தை காட்டுபவரும் அல்ல. திமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி. இதுவரை எந்த சர்ச்சையும் இல்லை.  ஆங்காங்கே நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க காவல்துறையினர் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். தில்லியில் ஆட்சியில் இருந்த ஆம்ஆத்மி, ஆட்சியை இழந்திருக்கிறது. முறையான மரியாதை, முறையான பங்களிப்பு இருந்தால்தான் கூட்டணியில் தொடர முடியும்.  குறைந்த எண்ணிக்கையில் இடங்களைக் கொடுத்தால் அந்தக் கூட்டணியில் எப்படி நீடிக்க முடியும் என்றார்.

பாபநாசம் வட்டாரத்தில் விவசாயிகள் முகாம்

பாபநாசம், பிப்.11-  பாபநாசம் வட்டாரத்தில் நடந்து வரும் முகாமில், விவசாயிகள் தங்கள் நிலஉடமை பதிவுகளை சரிபார்த்தல் வேண்டுமென்று பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முகமது பாரூக் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறி்பில், பாபநாசம் வட்டாரத்தில் உள்ள 48 வருவாய் கிராமங்களிலும் தங்கள் நில உடைமை பதிவுகளை சரிபார்க்கும் முகாம் வேளாண்மைத் துறை, சகோதரத் துறை அதிகாரிகள், மகளிர் திட்ட சமூக வள பயிற்றுநர்கள் மூலம் நடந்து வருகிறது. அனைத்து விவசாயிகளும் தங்கள் பெயரில் உள்ள நில ஆவணங்கள், ஆதார் அட்டையுடன் இணைந்த கைபேசி போன்ற ஆவணங்களை முகாமிற்கு எடுத்துச்சென்று பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு, ஆதார் அட்டை எண் போன்ற விவசாய அடையாள எண் அட்டை வருங்காலங்களில் வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

மும்பை - சென்னை ரயிலை நெல்லைக்கு நீட்டிக்க கோரிக்கை

திருநெல்வேலி, பிப்.11- மும்பை - சென்னை ரயிலை நெல்லைக்கு நீட்டிக்க வலியுறுத்தி மும்பை கோட்ட ரயில்வே மேலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், எம்.பி.,யுமான வர்ஷா கெய்க்வாட் அசோக்குமார், தாராவி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அருணாசலம் உள்ளிட்டோர் கோட்ட மேலாளர் மீனாவை சந்தித்து முக்கிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். தாராவி ரயில்வே ஸ்டேஷன் அமைத்தல், மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்குதல், 22159 மும்பை -சென்னை ரயிலை நெல்லை வரை நீட்டித்தல், 16382 கன்னியாகுமரி- புனே ரயிலை மும்பை வரை நீட்டித்தல், கோடைகால சிறப்பு ரயில்களை இயக்குவது, ரயிலில் பயணிகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை

தஞ்சாவூர், பிப்.11-  தஞ்சாவூர் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் ரூ.14 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வந்த புகாரை அடுத்து, மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் கா. சரவணக் குமாரிடம் திங்கட்கிழமை தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில், மாநகரில் 51 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளைச் சேமித்து, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்குகளில் குப்பைகளை தரம் பிரிக்க தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், முறையாக குப்பைகளை தரம் பிரிக்காமல் அதற்கான மாநகராட்சி நிதியை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த ஜானகி ரவீந்திரன், கா. சரவணக்குமார் ஆகியோரை விசாரிக்க, லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கா. சரவணக்குமாரை திங்கள்கிழமை வரவழைத்து சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறுகையில்: தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் குப்பைகளை தரம் பிரிக்காமல் அந்த நிதி ரூ.14 கோடி அளவுக்கு முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், குப்பைகள் தரம் பிரிப்பது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆய்வறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த ஜானகி ரவீந்திரன், கா.சரவணக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் கா. சரவணக்குமார் வரவழைக்கப்பட்டு, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அலுவலர்கள் கேள்விக்கு சரவணக்குமார், மாநகராட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டே குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டதாகவும், பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். தொடர்ந்து பிப்.26-ஆம் தேதி ஜானகி ரவீந்திரனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர்” என்று தெரிவித்தனர்.