districts

img

மயிலாடுதுறை - திருச்சி டெமோ ரயிலுக்கு பதிலாக கூடுதல் பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்க வேண்டும்

கும்பகோணம், பிப்.11-   மயிலாடுதுறை - திருச்சி டெமோ ரயிலுக்கு பதிலாக கூடுதல் பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்க வேண்டும். அதன் நேரத்தை மாற்ற வேண்டும். கூடுதல் ரயில்கள் இயக்கப்படவேண்டும். ரயில் நிலையத்தில் இயங்கி வரும் வாகனப் பாதுகாப்புக்கான கட்டணம் குறைக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் மாநகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், மாவட்டக் குழு உறுப்பினர் எம். கண்ணன், மாமன்ற உறுப்பினர் செல்வம், ஓய்வூதியர்  சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ராஜகோபாலன், கும்பகோணம் கிளைச் செயலாளர் பக்கிரிசாமி உள்ளிட்ட ஏராளமான சிபிஎம் கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் மாநகரச் செயலாளர் செந்தில்குமார், செய்தியாளர்களிடம் கூறுகையில், மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ஏற்கனவே இயக்கப்பட்ட மைசூர் - மயிலாடுதுறை ரயில் கடலூர் வரை நீட்டிக்கப்பட்டதால் மாற்று ஏற்பாடாக டெமோ ரயில் இயக்கப்படுகிறது. பாபநாசம், தஞ்சை, திருச்சி செல்லும் பொதுமக்கள் வசதிக்காக விடப்பட்ட டெமோ ரயில், கும்பகோணத்தில் காலை 8-40 க்கு  இயக்கப்படுவது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சௌகரியமாக இருந்தது.  ஆனால் தற்பொழுது டெமோ ரயில் நேரம் கும்பகோணத்தில் 8-20 என மாற்றப் பட்டதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ரயிலைப் பிடிக்கமுடியாமல் கஷ்டப் படுகின்றனர். டெமோ ரயில் நேரம் மாற்றப்பட்டது மட்டுமல்ல, சேலம் ரயில், தஞ்சாவூர் பாசஞ்சர் ரயில் நேரங்களும் முன்னதாக மாற்றப் பட்டுள்ளன. எனவே, பழையபடியே ரயில் நேரத்தை காலை 7-00, 8-00, 8-40 என மாற்றி ரயில்களை இயக்க வேண்டும்.  மேலும் காலையில் 8.30 க்குப் பிறகு 12.40 வரை தஞ்சை, திருச்சி செல்ல ரயில்கள் இல்லை. இதே நிலைதான் தஞ்சை -  கும்பகோணம் ரயில்களுக்கும். பேருந்துகளின் பயண நேரத்தை விட ரயில்களின் பயண நேரம் குறைவு என்பதால் அதிக பயணிகள் ரயிலை உபயோகிக்கின்றனர். கூடுதல் ரயில்களை இரு மார்க்கங்களிலும் இயக்கினால் பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே பயணிகள் வசதிக்காக கூடுதல் ரயில் இயக்க வேண்டும்.  கும்பகோணம் ரயில் நிலையத்தில், பயணிகள் உபயோகத்திற்காக அமைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகன காப்பகத்தில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், கட்டணம் அதிகமாக உள்ளது. அதனை குறைத்து 24 மணி நேரத்திற்கு ரூ5/- என கட்டணத்தை மாற்றியமைத்தால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.  மேலும், ரயில் பயணிகளுக்கு அவர்கள் வரும் வாகனத்தை இலவசமாகப் பாதுகாக்க வேண்டியது ரயில் நிர்வாகத்தின் கடமை என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறோம். ஆகவே பயணிகள் நலன் கருதி, திருச்சி ரயில் போக்குவரத்து கோட்ட மேலாளர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுகிறோம் எனத் தெரிவித்தார்.