கும்பகோணம், பிப்.24- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில், திருச்சேறை, துக்காச்சி, நல்லாடை உள்ளிட்ட மேல்நிலை பள்ளிகளில் உள்ள 10 ஆம் வகுப்பு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 1868 மாணவ, மாணவியர்களுக்கு பொதுத்தேர்வுக்கு பின் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம் என்கின்ற மேற்படிப்பிற்கான கல்வி ஆலோசனை முகாம் நாச்சியார் கோவில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அரசின் உயர்கல்வி துறை அமைச்சருமான கோவி. செழியன் தலைமை வகித்தார். முகாமை வாழ்த்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம் பேசினார். முன்னதாக நாச்சியார் கோவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் நல்லாசிரியர் விருது பெற்றவருமான தலைமையாசிரியர் அல்லி அனைவரையும் வரவேற்றார். கல்வி முகாமில் சிறப்பு கருத்துரையாளர்களாக ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சிபி குமரன், கோயமுத்தூர் முதுநிலை ஆசிரியர் ராஜா முகமது ஆகியோர் மாணவ மாணவியர்களின் கேள்விகளுக்கும் சந்தேகத்திற்கும் பதில் அளித்தனர். மேலும், நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாச்சியார்கோவில் அரசு ஆண்கள மேல்நிலைப்பள்ளி எம். குமார், ஆர்.கே.ஆர் அரசு மேல்நிலைப்பள்ளி, செந்தில் நல்லாடை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, நாகலட்சுமி உக்காச்சி அரசு உயர்நிலைப்பள்ளி, வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை பெற்றனர். பரிசுத்தொகையை பள்ளிக்கு வழங்கிய தலைமை ஆசிரியை நிகழ்ச்சியில் முன்னதாக நாச்சியார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றும் அல்லிக்கு, தமிழக அரசால் 2023_24 ஆண்டு பேராசிரியர் அன்பழகனார் விருதும், பத்து லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. அதனை, தான் பணியாற்றும் நாச்சியார்கோவில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முழு தொகையையும் வழங்கி, மாணவிகள் அமர்ந்து உணவு உண்ணும் கூடம் மற்றும் மிதிவண்டிகள் நிறுத்தும் கூடம் ஆகியவற்றை கட்டிக் கொடுத்துள்ளார். அதனை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.