பெரம்பலூர், பிப்.24- கோனேரிபாளையம் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் வட்டம் கோனேரி பாளையம் கிராமத்தை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில், கோனேரிபாளையம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகிறோம். நாங்கள் அனைவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு நூறு நாள் வேலைசெய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு வாழ்வாதாரமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம்(நூறு நாள் வேலை) மட்டுமே உள்ளது. ஆதலால், எங்களுடைய கோனேரிபாளையம் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியோடு இணைத்தால், எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே எங்கள் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியோடு இணைக்க வேண்டாம் என அதில் தெரிவித்திருந்தனர்.