தஞ்சாவூர், மார்ச் 1- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் துவரங்குறிச்சியில், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக கிராம கல்விக்குழு வெள்ளிக்கிழமை துவக்கப்பட்டது. துவரங்குறிச்சி கிருஷ்ணமிர்தா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ். சோமசுந்தரம் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரிதா வரவேற்றார். பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க மண்டல ஒருங்கிணைப்பாளர் தனபால், பள்ளிக்கல்வி தொடர்பான வாதங்களை கிராம சபைக் கூட்டங்களில் முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில், துவரங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் இருந்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்பட சுமார் 22 பேர் கலந்து கொண்டனர். கள்ளிக்காடு தொடக்கப் பள்ளியில் ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளதால், இன்னொரு ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். துவரங்குறிச்சி கீழக்காடு தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும். பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என மார்ச் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துவது என்றும் என தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக சிவ.ரவிச்சந்திரன், ஆசைத்தம்பி, பாலா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மைக்குழு துணைத் தலைவர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.