districts

திருச்சி முக்கிய செய்திகள்

பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கு  220 பறக்கும் படையினர் நியமனம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 1-  திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு மார்ச்5 ஆம்தேதி தொடங்கி 27 ஆம்தேதி வரையும், பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 3 ஆம்தேதி தொடங்கி 25 ஆம்தேதி வரையும் நடைபெறுகிறது.  தேர்வு நடைபெறும் நாளன்று 34 வழித்தட அலுவலர் மூலம் 131 தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும். 131 முதன்மை கண்காணிப்பாளர்கள், 131 துறை அலுவலர்கள் மற்றும் 21 கூடுதல் துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 220 பறக்கும் படையினர் தேர்வு நல்லமுறையில் நடைபெறுவதை உறுதி செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கிய நகராட்சி பில் கலெக்டர்  கைது: இடைத்தரகரும் சிக்கினார்

பெரம்பலூர், மார்ச்.1-  பெரம்பலூரில் நகராட்சி பில்கலெக்டர் சிவக்குமார், புதிதாக கட்டிய வீட்டிற்கு வரி ரசீது போடுவதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், கைது செய்தனர். இடைத்தரகர் ராமர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.  பெரம்பலூர், ஆலம்பாடி பகுதியைச் சேர்ந்த சுபாஸ்சந்திரபோஸ் என்பவர், புதிதாக கட்டிய வீட்டிற்கு வரி ரசீது போடுவதற்காக நகராட்சியை அணுகியுள்ளார். பழைய நகராட்சி அலுவலகத்தில் உள்ள பில்கலெக்டர் சிவக்குமாரிடம் இது தொடர்பாக விண்ணப்பம் செய்ய சென்றபோது, புதிதாக ரசீது போடுவதற்கு இடைத்தரகர் மூலம் ரூ25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுபாஸ்சந்திர போஸ், இதனை லஞ்சஒழிப்பு போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.  அவர்கள் கொடுத்த ஆலோசனையின் படி சுபாஸ்சந்திரபோஸ் பழைய நகராட்சி அலுவலகத்திற்குச் சென்று ரூ.25 ஆயிரத்தை லஞ்சமாகக் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமசித்ரா, ஆய்வாளர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் திடீரென நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து பில்கலெக்டர் சிவக்குமார் மற்றும் இடைத்தரகர் ராமர் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மருதுபாண்டியர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூர், மார்ச் 1-  தஞ்சாவூர், மருதுபாண்டியர் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பாக 4 நாட்கள் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.  இம்முகாமை மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர்  கொ.மருதுபாண்டியன் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா,  துணைமுதல்வர் ரா.தங்கராஜ் முன்னிலை வகித்தனர். முகாமில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை தகுதி அடிப்படையில் தேர்வு செய்தனர்.  இதில், இறுதியாண்டு மாணவர்கள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச எழுதுபொருட்கள்

தஞ்சாவூர், மார்ச்.1 - பொதுத்தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனியார் புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை நிலையம் சார்பில் இலவச எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கடைவீதியில் ரெஜினா புக் சென்டர் என்ற பெயரில் புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருபவர் ரபீக் அகமது. இவர் கடந்த 13 வருடங்களாக 10, 11, 12  ஆம் வகுப்பு படித்து வரும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஷார்ப்னர் (பென்சில் கூர் தீட்டி) உள்ளிட்ட எழுதுபொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை தனது தந்தையார் மறைந்த சாகுல்ஹமீது நினைவாக வழங்கி வருகிறார்.  அதே போல், இந்த ஆண்டும் 36 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 5,650 மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.4 லட்சம்.  நிகழ்வில், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், புத்தக நிறுவனத்தைச் சேர்ந்த உமர் ஜகுபர், மஸ்தான், பேராவூரணி பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைப்பு

திருநெல்வேலி, மார்ச் 1- கோடை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில், செங்கோட்டை ரயில்களில் தற்காலிகமாக 6 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. வருகிற கோடை காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பயணிகளின் வசதிக்காக தற்காலிகமாக குறிப்பிட்ட ரயில்களில் 6 கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண்: 22681) புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதில் ஒரு ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, இரண்டு ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவில்லா பெட்டி ஆகிய 6 பெட்டிகள் மார்ச் 1 முதல் ஜூன் மாதம் 18 ஆம் தேதி வரை தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு (வண்டி எண்: 22682) வியாழன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்படும் இந்த ரயிலிலும் மார்ச் 1  முதல் 19 ஜூலை வரை அதே 6 பெட்டிகள் இணைக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே போல தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு (வண்டி எண்: 22657) திங்கள், புதன், ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதில் ஒரு ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, இரண்டு ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவில்லா பெட்டி ஆகிய 6 பெட்டிகள் மார்ச் 2 முதல் ஜூன் மாதம் 16 ஆம் தேதி வரை தற்காலிகமாக இணைக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு (வண்டி எண்: 22658) திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இயக்கப்படும் இந்த ரயிலிலும் மார்ச் 3 முதல் 17 ஜூலை வரை அதேபோல் 6 பெட்டிகள் இணைக்கப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து மார்ச் 11 நெல்லையில் அனைத்து  தொழிற்சங்கங்கள் சார்பில் மாநாடு

திருநெல்வேலி, மார்ச் 1- ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நெல்லையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்  மார்ச் 11 அன்று திறந்தவெளி மாநாடு நடத்தப்படுகிறது. நெல்லை வண்ணார்பேட்டை தொ. மு .ச தலைமை அலுவலகத்தில் அனைத்து சங்க கூட்டம் சனிக்கிழமையன்று நடைபெற்றது  கூட்டத்திற்கு  தொ.மு.ச அமைப்பு செயலாளர் அ.தர்மன்  தலைமை தாங்கினார் ,சிஐடியு  மாவட்ட செயலாளர்  ஆர்.முருகன் முன்னிலை வகித்தார்,கூட்டத்தில்  ஏஐடியுசி பொதுச் செயலாளர் ஆர்.சடையப்பன்,எச்.எம்.எஸ். மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணியன், ஏ.ஐ.சி.சி.டி.யு கணேசன்,துர்க்கைமுத்து , ஏ.ஐ.டி.யு.சி  துணைத் தலைவர் ரங்கன், தொ.மு.ச. சைபுதீன், வெ.முருகன்,பாலா,மகாவிஷ்ணு, சிஐடியு நிர்வாகிகள் சரவண பெருமாள், மாரிச்செல்வம், ஏ.ஐ.டி.யு.சி ரெங்கன்,உலகநாதன்,எச்.எம்.எஸ் பாலகிருஷ்ணன், திபான் மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில்  திருநெல்வேலி, தூத்துக்குடி ,தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட அனைத்து சங்கம் சார்பாக திருநெல்வேலி  அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பாக திறந்த வெளி மாநாடு  மார்ச் 11 அன்று  மாலை 4  மணி அளவில் நடத்துவது. மேற்கண்ட திறந்தவெளி மாநாட்டிற்கு நான்கு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான  தொழிலாளர்களை திரட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில்  52 செ.மீ.மழை:  சேர்வலாறு அணை நீர்மட்டம் 5 அடி உயர்வு

திருநெல்வேலி, மார்ச் 1- திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமையன்று பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஊத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 8.1 சென்டிமீட்டர் மழையும் நாலு முக்கில் 7.2 சென்டிமீட்டர் மழையும் காக்காச்சியில் 6.6 சென்டிமீட்டர் மழையும் மாஞ்சோலையில் 5.5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சமவெளி பகுதிகளில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 4.8 செ.மீ, சேர்வலாறு அணை பகுதியில் 4.2 செ.மீ மழை பொழிவும் பதிவாகியுள்ளது. அம்பாசமுத்திரத்தில் 19 மி. மீ,  சேரன்மகாதேவியில் 30 மி.மீ, மணிமுத்தாறு அணைப்பகுதியில் 24 மி. மீ. பாளையங்கோட்டையில் 13 மி. மீ,  திருநெல்வேலியில் 10.6 மி. மீட்டர், பாபநாசம் அணைப்பகுதியில் 48 மி.மீ மழை பொழிவு பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 525.20 மில்லி மீட்டர் அதாவது 52.52 செ.மீ மழை பொழிவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மழைப்பொழிவினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

ஆயுதங்களை காட்டி மிரட்டி தம்பதியிடம்  வழிப்பறி செய்த மூவர் கைது

தஞ்சாவூர், மார்ச்.1-  தஞ்சாவூர் மாவட்டம், தொண்டாம்தோப்பு மேலதெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி உஷா  (33). இவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தஞ்சை யில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பின்னர், நள்ளிரவு ஒரு மணி அளவில் மீண்டும் ஊருக்குத் திரும்பி னர். அப்போது பூண்டி அருகே அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 3  நபர்கள் வழிமறித்தனர். அந்த 3 பேரும் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை காட்டி மிரட்டி, சரவணனின் மனைவி உஷா அணிந்திருந்த ஐந்து சவரன் தங்கச் சங்கிலி  மற்றும் அரை சவரன் தோடு ஆகியவற்றை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து உஷா அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.   விசாரணையில் தென்காசி மாவட்டம் தல்லாங்குளம் பகுதியை சேர்ந்த அருள் குமார் (23), திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (35),  அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (24) ஆகிய 3 பேரும்  உஷாவிடம் நகைகளை வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதில் அருள்குமார் மற்றும் சுரேஷ்குமார் மீது ஏற்கனவே  பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, 3 பேரை யும் கைது செய்த காவல்துறையினர் பாபநாசம் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஐந்தரை சவரன் நகைகள், திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் இரும்பு கம்பி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

கோவில் உண்டியலில் காந்தத்தை பயன்படுத்தி  நூதன முறையில் திருடிய வாலிபர் கைது 

தஞ்சாவூர், மார்ச் 1-  புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உண்டியலில் இருந்து நூதன முறையில் காந்தத்தை வைத்து, நாணயங்கள் மற்றும் பணத்தை திருடிய வாலிபர் சிக்கினார். தஞ்சை அருகே அமைந்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில்.  இந்தக் கோவிலுக்கு விழா காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். 21 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்.10-ஆம் தேதி கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பணம் நகைகளை காணிக்கையாக செலுத்துவதற்கு வசதியாக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது இந்த உண்டியல்கள் திறந்து பணம், நகைகள் எண்ணப்படும். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உண்டியலில் பணம் மற்றும் ஒரு ரூபாய் நாணயங்கள் திருடு போவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் வியாழக்கிழமை வாலிபர் ஒருவர் கோவில் உண்டியலில் காந்தம் வைத்து நூதன முறையில் பணம், நாணயங்களை திருட முயன்றார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள் அங்கு சென்றபோது, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் மணிகண்டன், தஞ்சை தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நூதன முறையில் பணம் திருட முயன்றது தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் கங்காதரபுரம் மேல தெருவை சேர்ந்த ஐயப்பன் (24) என்பது தெரிய வந்தது.  இதையடுத்து, ஐயப்பனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதேபோல் காந்தத்தை வைத்து இக்கோவில் உண்டியலில் ஐயப்பன் பலமுறை ரூ.5 ஆயிரம் வரை திருடி இருக்கலாம் என கூறப்படுகிறது.